தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நாயகியாக இருப்பவர் மீனாட்சி சௌத்ரி. விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்திலும், ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களில் இவரது அறிமுகமும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெறவில்லை.
அந்த படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில், அப்பா விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாகவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடித்திருந்தனர்.
தி கோட் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்த மீனாட்சி செளத்ரிக்கு நடிப்பதற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் விஜய்க்கு ஜோடியாக நடித்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை மீனாட்சி சௌத்ரியால் பெற முடியவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் மீனாட்சி சவுத்ரி துல்கர் சல்மான் மனைவியாக, ஒரு பிள்ளைக்கு தாயாக நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான லக்கி பாஸ்கர் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதில் அதிக காட்சிகளில் நடிக்கும் ஒரு வாய்ப்பும் மீனாட்சி சௌத்ரி கிடைத்துள்ளது. அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி அதிரடி முடிவெடுத்து ஒரு புதிய நிபந்தனையை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தொடர்ந்து சில படங்களில் மனைவி கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறேன். லக்கி பாஸ்கர் படத்தில் மனைவியாக நடித்திருந்த எனக்கு பாராட்டுகளும் கிடைத்தது.
ஆனால் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே மனைவி கேரக்டரில் நடிக்காமல் இருப்பதுதான் நல்லது. அப்படி நடிக்க இன்னும் உனக்கு காலம் இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். எனவே வருங்காலத்தில் இது போன்ற மனைவி கேரக்டரில் நடிக்க கூடாது என முடிவு செய்திருக்கிறேன். அடுத்து ஒரு அதிரடி சண்டை படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.





