நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது. சத்யராஜ், ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இந்த படத்தில் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைவர் மீது அதிக மரியாதை கொண்டவர். கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டு பேசி இருக்கிறார். ரஜினியின் பட விழாக்களில், கருணாநிதியும் பலமுறை பங்கேற்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில் திமுக அமைச்சர் எவ வேலு எழுதிய கலைஞர் என்னும் தாய் என்ற நூல் வௌியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கலை இலக்கியம் அரசியல் என சிறந்த அறிஞராக இருந்தவர் கருணாநிதி. ஸ்டாலின், திமுகவில் மூத்த மாணவர்களை சமாளித்து வருகிறார். அவருக்கு ஹேட்ஸ் ஆப். அமைச்சர் துரைமுருகனை சமாளிப்பது கடினம் என கருணாநிதியே பலமுறை கூறியிருக்கிறார்.
கருணாநிதியிடம் அரசியல் பேசினால், எச்சரிக்கையாக பேச வேண்டும். அவரது பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்காவது வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
தேர்தல் வெற்றிகள், முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின். இந்த புத்தகத்தின் விலை ரூ. 1000 என்பது மிக அதிகம். விலையை குறைத்தால் அனைவரும் படிப்பார்கள், என்று அந்த விழாவில் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். கருணாநிதி பற்றி எழுதிய நூலின் விலை மிக அதிகம் என்று ரஜினி சொன்னது, திமுகவினரிைடயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.





