கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் கதாநாயகியாக ராஸ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக பகத் ஃபாசில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி என பிற மொழிகளிலும் புஷ்பா படம் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து புஷ்பா 2 படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி உலகளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து புஷ்பா 3 படமும் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக உள்ளது. புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரன் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே செய்த முடிவின்படி இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து புஷ்பா 3 படம் குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படம் நாளை மறுதினம் 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
34 ஆண்டுகளுக்கு முன் 1991ம் ஆண்டில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வருகிற 22ம் தேதி வெளியிட உள்ளனர். 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். இந்த படம் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. இதில் சந்தன கடத்தல் வீரப்பன் கேரக்டரில் வீரபத்திரன் என்ற பெயரில் நடிகர் மன்சூரலிகான் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது இந்த படத்தில் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் சந்தன மரங்களை வாகனங்களில் கடத்தாமல் ஓடுகிற ஆற்றுநீர் வழியாக மிதக்க விட்டு கடத்தும் காட்சி கேப்டன் பிரபாகரன் படத்தில் வருகிறது. இந்த காட்சியை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்து தான் புஷ்பா படத்தில் ஒரு காட்சியில் செம்மரக்கட்டைகள் அனைத்தையும் ஓடுகிற நீரில் கடத்துவது போல் காட்டி இருந்தார்கள்.
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் என்பதால் ரசிகர்கள் அந்த காட்சியை மறந்திருப்பார்கள் என்று கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த காட்சியை அப்படியே காப்பியடித்து புஷ்பா படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் சுகுமாரன். இப்போது கேப்டன் பிரபாகரன் படம் நாளை மறுதினம் வெளியானால் புஷ்பா படத்தின் அந்த செம்மரக் கடத்தல் காட்சி, கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து காப்பியடித்தது தான் என்பதை ரசிகர்கள் பார்த்தவுடனே தெரிந்து கொள்வார்கள். இது தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளது.





