மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் உருவான எம்டன் மகன் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் வடிவேலு, குரங்கு வேஷம் போட்டுட்டா மரத்துக்கு மரம் தவ்வித்தானே ஆகணும்? என்று காமெடியாக சொல்வார். அதுபோல் நடிகராக வந்து விட்டால் நடிப்பு என்கிற போர்வையில் எப்படியாவது கல்லா கட்டத்தான் பலரும் நினைக்கின்றனர்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இமேஜ் இழந்து விட்டால் டிவி சீரியல்களில் நடிக்கின்றனர். அங்கும் மவுசு குறைந்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கின்றனர். மார்க்கெட் இருக்கும் போதே பல ஹீரோக்கள் ஹீரோயின்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.
நடிகர்கள் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சத்யராஜ் விஜய் சேதுபதி சிம்பு தேவயானி குஷ்பு ரம்யாகிருஷ்ணன் தமன்னா கார்த்தி சரத்குமார் பிரபு அர்ஜூன் டெல்லி கணேஷ் இசையமைப்பாளர் அனிருத் என பலரும் விளம்பர படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். டிவி சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். முதல் படத்திலேயே அவரது இசையும் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் அவர் திரைப்பட நடிகராகவும் மாறிவிட்டார். இதுவரை 25 படங்கள் வரை அவர் நடித்திருக்கிறார். அவரது சில படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் கூறியதாவது, கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். மதுபானங்கள் சூதாட்டம் அல்லது குளிர்பானங்கள் போன்ற மக்களின் உடல்நலத்திற்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
இதற்கு முன்பு நிறைய குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்ய என்னை கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக தர முன் வந்தாலும் அதில் நான் நடிக்க மாட்டேன். இதுபோல நிறைய முறை நான் நிராகரித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சொந்த சகோதரி மகன்தான் ஜீவி பிரகாஷ்குமார் என்பது பலரும் அறியாத உண்மையாகும்.





