தமிழ் சினிமாவில், கடந்த 1990களில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளுங்கட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி அமைச்சர் ரோஜாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், அவர் ஆபாச படத்தில் நடித்தவர் ரோஜா எனவும் கூறியிருந்தார்.
நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என்று அவர் கூறியது, ஆந்திர அரசியலில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆந்திராவில் உள்ள மகளிர் ஆணையம் புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, கண்ணீர் விட்டு அழுதார். தன் மீது அபாண்ட பழி சுமத்திய பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி மீது, மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். இது ஆந்திரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகை குஷ்பு இதுகுறித்து ஒரு வீடியோ பதிவிட்டு தனது கண்டனத்தை சில தினங்களுக்கு முன் பதிவு செய்திருந்தார். அதில் ஒரு நல்ல நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்த நடிகை ரோஜாவை, இப்போது ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு மதிப்புமிகுந்த பெண்ணை, இப்படி அசிங்கமாக பேசியது மிகவும் தவறு. ரோஜாவை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்வு அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ராதிகா சரத்குமார் தனது வீடியோ பதிவின் மூலம், நடிகை ரோஜாவுக்கு ஆதரவாகவும், அவரை பற்றிய அவதூறான பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பதோடு, ராடன் என்ற பெயரில், நிறைய டிவி சீரியல்களை தயாரித்தும், அந்த சீரியல்களில் நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவில் நடிகை ராதிகா கூறியிருப்பதாவது, ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல்வாதியாக எனக்கு ரோஜாவை பற்றி நன்றாக தெரியும். அவர் மிகவும் தைரியமானவர். ரோஜாவை பற்றி, முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திநாராயணா மூர்த்தி பேசியிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது, மிகவும் தரம் தாழ்ந்த ஒரு அரசியல் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. இப்படிபட்ட தவறான பேச்சு, பெண் சமுதாயத்தை அவமதிப்பதாக உள்ளது.
மத்திய அரசு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ள இன்றைய சூழலில், பெண்கள் கல்வியில், வேலைகளில் மட்டுமின்றி அரசியலிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். சமூகத்தின் வளர்ச்சியில், நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களும் முக்கிய தூண்களாக உள்ளனர். இந்நிலையில், ரோஜா குறித்த இந்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் இந்த தேசத்தில் இதுபோன்ற கருத்துகள், விமர்சனங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு பெண் அமைச்சரை இப்படி தரக்குறைவாக விமர்சிக்க, பண்டாரு சத்தியநாராயணா மூர்த்திக்கு என்ன தகுதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு, பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் தொடராமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.





