தமிழ் சினிமாவில் நடனத்தை நம்பி உள்ளே வந்தவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் தமிழ் பாடல்களுக்கு பின்னால் நடனமாடிக் கொண்டிருந்த அவரை நாம் பார்த்திருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்ட ராகவா லாரன்ஸ், ஒரு கட்டத்தில் டான்ஸ் மாஸ்டராக வலம் வர ஆரம்பித்தார்.
அங்கிருந்து, சில படங்களில் உள்ள பாடலுக்கு அவர் முக்கிய ஆளாக நடனமாடுவதையும் நம்மால் பார்க்க முடிந்தது. குறிப்பாக அமர்க்களம் திரைப்படத்தை நாம் கூறலாம். அதில் உள்ள மகா கணபதி பாடலுக்கு, முழுக்க முழுக்க ராகவா லாரன்ஸ் நடனமாடிருப்பார். இங்கிருந்து ராகவா லாரன்ஸ்க்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, அற்புதம் பார்த்தாலே பசி தீரும் உள்ளிட்ட திரைப்படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை. சொல்லப்போனால் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் இயக்குனர் ரூட்டை கச்சிதமாக கைப்பற்றினார் ராகவா லாரன்ஸ்.
தமிழில் அவர் இயக்கத்தில் முதல் திரைப்படமாக முனி வெளியானது. தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கலாம், ஆனால் அதில் காமெடியை கச்சிதமாக புகுத்தி ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் வைத்து அதோடு பயமுறுத்தவும் செய்தவர்தான் ராகவா லாரன்ஸ். இந்த ஃபார்முலா சரியாக ஒர்க் அவுட் ஆனதால், ராகவா லாரன்ஸின் ஹாரர் படங்களுக்கு வரவேற்பு கூட ஆரம்பித்தது.
குறிப்பாக அவர் இயக்கத்தில் வெளியான காஞ்சனா சீரிஸ்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூல் மழை குவித்தது. இருப்பினும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபிக்க அவருக்கு எந்த ஒரு படங்களும் சரியாக அமையவில்லை. இந்தக் குறையையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் போக்கியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் தனது அசத்தலான நடிப்பில் பின்னி பெடல் எடுத்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது தம்பி எல்வினை புல்லட் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. ராகவா லாரன்ஸ் கெஸ்ட் ரோல் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தனது தம்பியின் படத்தை பார்த்த ராகவா லாரன்ஸ், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். புல்லட் படம் நன்றாக வந்திருப்பதால், தனது தம்பிக்கு விலை உயர்ந்த காரையும் அவர் பரிசாக அளித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





