பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக தந்த இயக்குனர் மணிரத்னம், இப்போது தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர்கள் ஜெயம் ரவி, சித்தார்த் நடிக்க கமிட் ஆகி இருந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் திடீரென வெளியேறினார். அதேபோல் அடுத்து சில வாரங்களில் நடிகர் ஜெயம் ரவியும் விலகி விட்டார். இப்படி மணிரத்தினம் படத்தில் கமிட் ஆன முக்கிய நடிகர்கள் திடீரென படத்தில் நடிக்க மறுத்து விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் துல்கர் சல்மான் வெளியேறியதற்கான காரணம், தக்லைப் படத்தில் அவர் நடிக்க வேண்டிய கேரக்டர், சம்பளம், கால்ஷீட் தேதிகள் குறித்து எதுவும் மணிரத்னம் தரப்பிலிருந்து கூறப்படவில்லை. பான் இந்தியா நடிகரான துல்கர் சல்மான் பிஸியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், மணிரத்னம் அவரை மதித்து நடக்கவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே கமிட் ஆன மற்ற படங்களுக்கான தேதிகளை வீணாக்க முடியாது என்பதால், துல்கர் சல்மான் வெளியேறி விட்டார்.
அவரைத் தொடர்ந்து, ஜெயம் ரவி வெளியேறியதற்கான காரணம் இதேபோல் கால்ஷீட் பிரச்சனை தான் என்று முதலில் சொல்லப்பட்டது. அதாவது இரண்டு முறை 30 நாட்கள், 30 நாட்கள் என கால்ஷீட் வாங்கிவிட்டு, கடைசி நேரத்தில் இந்த கால்ஷீட் இப்போதைக்கு வேண்டாம் என்று, இரண்டு மாதங்களை வேஸ்ட் செய்துள்ளனர். மேலும் துல்கர் சல்மான் கேரக்டரில் நடிக்க சிம்பு கமிட் செய்யப்பட்டார். சிம்பு நடிக்கும் படத்தில் தனக்கு நடிக்க விருப்பமில்ல்லை என்பதாலும் ஜெயம்ரவி வெளியேறியதாக ஒரு தகவல் உள்ளது.
இந்நிலையில், தக்லைப் படத்தில் இருந்து 3வது நபராக நடிகர் சித்தார்த் இப்போது வெளியேறியுள்ளார். சித்தார்த், ஆரம்ப காலத்தில் மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தன்னுடைய குருநாதர்கள் இரண்டு பேர், அதில் ஒருவர் மணிரத்னம், மற்றொருவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்று சித்தார்த் பலமுறை நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ஆனால் இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் படத்தில், மற்றொரு குருநாதர் கமலுடன் நடிக்கும் பொன்னான வாய்ப்புகளை சித்தார்த் தவிர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம், சித்தா படத்தின் வெற்றிக்கு பிறகு 3 படங்களில் சித்தார்த் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஐஸ்வர்யா ராய் இயக்கும் படமும் ஒன்று. இப்படி பல கமிட்மென்ட் உள்ள நிலையில், கால்ஷீட் நிலவரம் தெரியாமல், கேரக்டர் தெரியாமல் மணிரத்னம் படத்துக்காக மெனக்கெட முடியாது என்றே துல்கர் சல்மான், ஜெயம் ரவி வரிசையில், சித்தார்த்தும் தக்லைப் படத்தை விட்டு விலகி இருக்கிறார்.





