தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. ஆரம்பத்தில் நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். குறிப்பாக சில்லுனு ஒரு காதல், ஆறு, ஜோர், வெற்றிவேல் சக்திவேல், மனுநீதி உள்ளிட்ட படங்களில் வடிவேலுவுடன் தம்பி ராமையா காமெடி செய்திருந்தார்.
பிறகு இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கியவர் தம்பி ராமையா தான். இதில் நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம், இம்சை அரசன் 23ம் புலிகேசி அளவுக்கு பெரிய வெற்றியை, வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
அதன்பிறகு தம்பி ராமையா, வடிவேலுவை விட்டு பிரிந்து மற்ற நடிகர்களுடன் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கும்கி, மைனா, கொம்பன், அப்பா, சாட்டை, திருமணம், பைரவா, வனமகன், வாகை சூடவா, வெற்றிவேல் சக்திவேல், தொடரி உள்ளிட்ட பல படங்களில் தம்பி ராமையா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்போது அவரது நடிப்பில் ராஜாகிளி என்ற படம் வெளியாக உள்ளது.
தம்பி ராமையா மகன் உமாபதி முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம், சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் – ஜீவஜோதி வாழ்க்கை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட கதை என்று சொல்லப்படுகிறது. ராஜகோபால் அண்ணாச்சியுடன் நெருங்கிய நண்பராக தம்பி ராமையா பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாகிளி படம் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. அதாவது புஷ்பா 2 டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆவதால், ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி ராஜாகிளி படம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.
ஆனால் இப்போது மீண்டும் 2வது முறையாக ராஜாகிளி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, வருகிற டிசம்பர் 27ம் தேதி ராஜாகிளி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2, திரு மாணிக்கம் படங்கள் வெளியாகிறது. அதனால் இன்னும் ஒரு வாரம் கழித்து டிசம்பர் 27ம் தேதிக்கு ராஜாகிளி படத்தை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





