- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால், அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் - தூத்துக்குடியில் ரஜினிகாந்த் புகழாரம்

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால், அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் – தூத்துக்குடியில் ரஜினிகாந்த் புகழாரம்

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தாா். அவரது உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல், சினிமா பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கோயம்போடு நோக்கி திரண்டதால், கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து விஜயகாந்த் உடல், இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு குறித்து பேசியுள்ளார். அவர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவாரா என்பது இன்று மாலைக்குள்தான் தெரிய வரும்.

நடிகர் விஜய் நேற்றிரவு விஜய் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று காலை முதல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு சினிமா, அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ள ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. தைரியமும், துணிச்சலும் மிக்க ஒரு மனிதர் விஜயகாந்த். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். எப்படியும் உடல் நலம் தேறி வந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.

ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அவரை பார்த்த போது, அந்த நம்பிக்கை ஏனோ எனக்கு குறைந்துவிட்டது. அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்