நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் நடனக்காட்சி வாயிலாக சினிமாவில் அறிமுகமானார். அந்த பாடலில் அவரது நடனம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து, பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பிறகு, அற்புதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ராகவா லாரன்ஸ் முனி படத்தில் நடித்து ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றார். அதன்பிறகு காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் பொருத்தவரை மக்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல ஆண்டுகளாக வசதியற்ற ஏழை மக்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, வறுமையில் வாழும் மக்களுக்கு, நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்களை தனது ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார். அவரகளது கல்விச் செலவை முழுவதுமாக ஏற்று, இதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவழிக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏதேனும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால் வீடு இழந்தால், தங்களது உடமைகளை இருந்தால் அவர்களுக்காக பல கோடி ரூபாய் நிவாரணமாகவும் அளித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த மே 1ஆம் தேதி மாற்றம் உங்கள் சேவை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்த திட்டத்தின் படி முதல் கட்டமாக அவர் 10 புதிய டிராக்டர்களை கிராமங்களில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு வழங்க இருப்பதாக வீடியோ வெளியிட்டார். இந்த மாற்றம் அமைப்பின் துவக்க விழாவில் நடிகர் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டு, ராகவா லாரன்ஸின் உதவும் குணம் குறித்து மிகவும் பாராட்டி பேசினார். ராகவா லாரன்ஸ் அம்மா, இந்த மாற்றம் அமைப்பு சேவை அமைப்பாக மட்டுமே இருக்கட்டும். தயவுசெய்து அரசியலாக்கி விடக்கூடாது என்று தன் மகனுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த மாற்றம் அமைப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஆடியோவில் கூறியிருப்பதாவது, வணக்கம் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். நீங்கள் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்போது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக மாற்றம் என்ற அறக்கட்டையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இன்னும் பல்லாயிரம் மக்களுக்கு நீங்கள் உதவி செய்யணும். அந்த ஆண்டவன் ஆசிர்வாதம், மக்கள் ஆதரவு எப்பவும் உங்களுக்கு இருக்கணும் என்று கூறியிருக்கிறார். 5 ஆயிரம் கோடி சொந்தக்காரர் நீங்கள், ஒரு கோடி ரூபாய் சிஷ்யனிடம் கொடுத்துட்டு இப்படி வாழ்த்தியிருந்தால் நன்றாக இருக்குமே, என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





