தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் பார்வையும் தற்போது கூலி திரைப்படத்தின் மீது திரும்பி உள்ளது. லோகேஷ் கனகராஜின் ஆறாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா என்னும் கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தை வைத்து கூலியை தயாரித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு, மோனிஷா மற்றும் பவர் ஹவுஸ் ஆகிய மூன்று பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின. அதிலும் மோனிஷா பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி இருப்பது, பலருக்கும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்தத் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படுவதற்கு காரணம், அதில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள்தான்.
பாலிவுட் திரையுலகிலிருந்து அமீர்கான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு தாஹா என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாள திரை உலகில் இருந்து சோபின் சாகிர் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
முதலில் பகத் பாசிலைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு கால் சீட் கிடைக்காததால், சோபின் சாகிர் உள்ளே வந்ததாகவும் சொல்லியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அது மட்டுமல்ல சத்யராஜுக்கும் இந்த திரைப்படத்தில் கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.
இதற்கு முந்தைய திரைப்படங்களில் எப்போதும் போதை வஸ்துகளை மையப்படுத்தியே கதை எழுதும் லோகேஷ் கனகராஜ், இந்த முறை தங்க வாட்சுகள் கடத்தப்படுவது பற்றி கதையை அலசி இருக்கிறார். துறைமுகம் சார்ந்த கதைக்களம் என்பதால் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட செட் போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் படத்திற்கு இப்படி ஒரு தணிக்கை சான்றிதழா என்று பலரும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சிவா திரைப்படத்திற்குதான் ஏ சான்றிதழ் கிடைத்தது. அதன் பிறகு ரஜினி படத்திற்கு இப்படி ஒரு தணிக்கை சான்று அமைந்திருக்கிறது. படத்தின் கண்டன்ட்டில் லோகேஷ் கனகராஜ் எந்த சமரசமும் செய்யாமல் இருப்பது இதன் மூலம் தெரிய வந்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள். வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





