லியோ திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்துடன் இணைந்து இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மற்ற திரைப்படங்களைப் போல் அல்லாமல் இந்த திரைப்படத்திற்காக, தீவிரமாக பணியாற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
ஏற்கனவே தனது முந்தைய திரைப்படம் போல் இது இருக்காது என்றும், நிச்சயமாக கஞ்சா மது சிகரெட் போன்ற போதை வஸ்துக்கள் இதில் இடம்பெறாது என்றும் உறுதியாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் சோதனை முயற்சியாக இதனை படமாக்குவதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
முந்தைய திரைப்படமான லியோவின் அறிவிப்பின்போது, கூடவே படம் எப்போது வெளியாகும் என்று வெளியிட்டிருந்தார் இயக்குனர். ஆனால் இந்த முறை அது நடக்காது என்றும், பொறுமையாக படத்தை இயக்கி முடிக்க போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதே போல் படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி தன்னிடம் பேசி வருவதாகவும் லோகேஷ் கூறியிருந்தார்.
முக்கியமாக இந்த திரைப்படம் எல் சி யூ வில் வராது என்றும் இயக்குனர் உறுதியாக தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகும் இதனை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகிகள் குறித்து அவ்வபோது தகவல் வெளியாகி வந்தது. குறிப்பாக தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷோபனா படத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதே போல் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரும் படத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இதையெல்லாம் லோகேஷ் கனகராஜ் கண்டுகொள்ளவே இல்லை. இப்படியான சூழலில் படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரஜினியின் பேவரிட் டயலாக் ஆன மது உண்டு மாது உண்டு வசனத்தையும் லோகேஷ் கனகராஜ் சேர்த்து இருக்கிறார். ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அதே டைட்டிலை பட குழுவினர் வைத்துள்ளனர். இதே போல் வசனத்தையும் இன்னொரு திரைப்படத்திலிருந்து சுட்டுள்ளனர். இப்படி முதல் அறிவிப்பு வீடியோவிலேயே இத்தனை காப்பியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





