சினிமாத் துறையை பொருத்தவரை முதுகெலும்பாக நின்று அந்த தொழிலை வாழ வைப்பதே தயாரிப்பாளர்கள்தான். இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் ஆகியோரை நம்பி நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை முதலீடு செய்து ஒரு கற்பனை படைப்பை திரைப்படமாக்கி ரசிகர்களிடம் கொண்டு வருவது தயாரிப்பாளர்தான் என்றால் அது மிகையல்ல.
கடந்த 2014ம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். கோலமாவு கோகிலா வட சென்னை ரோபோ 2.0 செக்கச் சிவந்த வானம் பன்னிக்குட்டி என பல வெற்றிப் படங்களை கொடுத்த இந்த நிறுவனம் ஒரு கட்டத்தில் தயாரித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக தர்பார் லால்சலாம் வந்தா ராஜாவா தான் வருவேன் பொன்னியின் செல்வன் 2 சந்திரமுகி 2 இந்தியன் 2 விடாமுயற்சி போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பலத்த தோல்வியை தந்து, பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்நிறுவனம் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு உதவ முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் ரஜினிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் லால் சலாம் படங்கள் மிகப்பெரிய பிளாப் படங்களாக இருந்தன. வேட்டையன் மட்டுமே ஓரளவு லாபத்தை கொடுத்தது.
அதனால் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் அதற்கான சம்பளத்தை முன்பே வாங்காமல் படம் முடிந்து கணிசமான லாபத்தில் வியாபாரம் நடந்த பிறகு பெற்றுக் கொள்ளவும், அதுமட்டுமின்றி சம்பளத்தையும் கணிசமாக குறைத்துக் கொள்ளவும் ரஜினி முடிவு செய்து, லைகா நிறுவனத்திடம் பேசி இருக்கிறார்.
இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி ஜெயிலர் 2 படங்கள் இரண்டுமே பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருப்பதால், அதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்தால் அந்த படத்தின் வியாபாரமும் பன்மடங்கு பெரிய அளவில் வரும். அது லைகா நிறுவனத்துக்கு பேருதவியாக அமையும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இவர் ரஜினி நடித்த பேட்ட பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.





