- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி… மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த் - சென்னை தீவுத்திடலில் கேப்டன்...

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி… மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த் – சென்னை தீவுத்திடலில் கேப்டன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், தனது 71வது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் உடல் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் நடிகர், நடிகைகள், கட்சி பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து சென்னையை நோக்கி சென்றதால் கோயம்பேடு அலுவலகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. நேற்றிரவு கூட்டம் அதிகரித்த நிலையில், நாளை (இன்று) கூட்டம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்ற சூழல் உருவானது.

- Advertisement -

இதையடுத்து கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இருந்து, இன்று காலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதல் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக சென்னை தீவுத்திடலுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா, விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

- Advertisement -

அதன்பின் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது, நடிகர் விஜயகாந்தை துரதிஷ்டவசமாக இழந்துவிட்டோம். ஒருமுறை விஜயகாந்துடன் பழகினால், அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு மட்டுமே பொருத்தமானது. சினிமாக்காரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்குமே கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கும். சுயநலம் இருக்காது.

நான் மருத்துவமனையில் இருந்த போது தொந்தரவாக இருந்த கூட்டத்தை ஐந்தே நிமிடத்தில் விரட்டியவர்தான் விஜயகாந்த். மலேசியா கலைநிகழ்ச்சிக்கு போன போது கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். அப்போது களத்தில் இறங்கி என்னை பூப்போல பாதுகாத்து கூட்டி வந்தவர் விஜயகாந்த் தான். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களில் மனதில் நின்றவர் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம் என்றார்.

- Advertisement -

சற்று முன்