ரசிகர்கள் மத்தியில் எந்த கலைக்கும் பேதமில்லை என்று சொல்வார்கள். அது போல் நல்ல திரைப்படங்கள் வரும்போது அதை ரசிகர்கள் இனம், மொழி என எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. தமிழ் நாட்டில், பிறமொழி படங்கள் வந்து தொடர்ந்து ஜெயித்து வருகின்றன. அதேபோல் தமிழ் படங்களும் பிறமொழிகளில் தொடர்ந்து ஜெயிக்கின்றன.
இங்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள்தான் தேவையாக இருக்கின்றன. படங்கள் நல்ல கதைக்களத்தில் இருந்தால் நிச்சயமாக அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வது ரசிகர்களின் கடமையாகவே இருக்கிறது. அதை அவர்கள் மிகச் சிறப்பாகவே செய்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாளத்திலிருந்து வெளியான பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பெற்று இருக்கின்றன.
உதாரணமாக நடப்பாண்டின் துவக்கத்தில் வெளியான பிரேமலு, பிரமயுகம், ஆடுஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதேபோல் தெலுங்கில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களும் பேசப்பட்டன. கன்னடத்தில் இருந்து வெளியான காந்தாரா படம் தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளில் இருந்து இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்.
காந்தாரா படம் மிக எளிமையான கதைக்களத்தில் மிக சாதாரணமான ஒரு படமாகதான் தோன்றும் என்றாலும், படத்தின் இறுதிக் காட்சிகளில் படத்தின் டைரக்டரும், ஹீரோருவமான ரிஷப் ஷெட்டியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள், இந்த படத்தை சர்வதேச அளவுக்கு ஒரு சிறந்த திரைப்படமாக கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.
இப்போது மீண்டும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக காந்தாரா 2 படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் 70 சதவீத ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் அரண்மனை போன்ற ஷெட் போடப்பட்டு அங்கு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது காந்தாரா 2 படத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் மோகன்லால், ரிஷப் ஷெட்டியின் தந்தை கேரக்டரில் நடிக்க உள்ளார். மோகன்லாலை பொறுத்தவரை மலையாள நடிகராக இருந்தாலும், இந்திய அளவில் அவர் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது கன்னடத்தில் காந்தாரா 2 படத்தில் ரிஷப் ஷெட்டியின் தந்தையாக அவர் நடிப்பது பெரிய அளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





