கூலி படத்துக்கு பின் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேரளா பாலக்காடு பகுதியில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இப்போது இமயமலைக்கு தனது நண்பர் ஒருவருடன் சென்றுவிட்டார்.
ஒரு வார் பத்து நாட்களுக்கு இமயமலை ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்லும் ரஜினிகாந்த் தியானத்தில் ஈடுபட உள்ளார். மேலும் அங்கு அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு மடங்களுக்கு செல்லும் ரஜினிகாந்த் அங்குள்ள யோகிகளை துறவிகளை சாமியார்களை சந்தித்து ஆசி வாங்குவதும் பிரார்த்தனையில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
தனது நண்பர் ஒருவருடன் இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ரோட்டோரத்தில் ஒரு சுமைகல்லின் மீது உணவு தட்டை வைத்து நின்றபடி சாப்பிடும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது. அங்குள்ள சில கோவில்களுக்கு ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன.
ரஜினியை பொருத்த வரை எவ்வளவு உச்சநிலையில் புகழில் செல்வாக்கில் இருந்தாலும் இன்னும் தன்னை மிக சாதாரண ஒரு மனிதராக அவர் வெளிப்படுத்திக் கொள்வதே அவரது சிறப்பாக உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 ஆகிய 3 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
எந்திரன் படத்தை முடித்துவிட்டு அந்த படம் தொடர்பான ஒரு நேர்காணலுக்காக ஸ்டுடியோ ஒன்றுக்கு ரஜினி வந்திருக்கிறார். அப்போது நேர்காணலை முடித்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறியுள்ளார். அப்போது காருக்கு அருகில் 100க்கும் மேற்பட்டோர் ரஜினியை காண ஆர்வமாக நின்றிருந்தனர். அவர்களை பார்த்த ரஜினி போட்டோ எடுக்கணுமா என்று கேட்டுக்கொண்டு காரை விட்டு இறங்கியுள்ளார். ஆமா சார் என்று கோரஸாக கத்திய அவர்கள் உற்சாகமாகி உள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்குள்ள அனைவரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், தூரத்தில் நின்றிருந்த வயதான ஊழியர் ஒருவர் மட்டும் ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வரவில்லை.
ஏனெனில் அவர் கழிப்பிடம் தூய்மை செய்யும் ஊழியர் என்பதால் ரஜினிக்கு அருகே வர தயங்கியிருக்கிறார். ஆனால் தூரத்தில் இருந்த அவரை கவனித்துவிட்ட ரஜினி, நீங்க போட்டோ எடுக்க வரலையா என்று சத்தமாக கேட்டுள்ளார். இல்லே பரவாயில்லை சார் என்று அவர் சங்கோஜமாக மறுத்திருக்கிறார். இல்லே வாங்க, உங்க கூட நான் போட்டோ எடுக்க ஆசைப்படறேன் என்று அவரை அழைத்து தன் அருகில் நிற்க வைத்து தோளில் கை போட்டபடி போஸ் தந்திருக்கிறார். இதுதான் அவரது ஸ்பெஷல் என அந்த நிகழ்ச்சியின் போது அங்கிருந்தவர்களில் ஒருவர் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.





