மலையாள சினிமாவில் எடுக்கப்படும் ஏராளமான சினிமாக்கள் இந்திய சினிமாவையே ஈர்க்கும் அளவுக்கு இருக்கின்றன. வெறும் சாதாரண கதையை மையமாக வைத்து, அதில் எதார்த்த வாழ்க்கையை காட்டுவதில் அங்குள்ள இயக்குனர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, மலையாள உலகிற்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியா முழுவதும் இருக்கிறது.
இதில் தமிழ்நாடு விதிவிலக்கல்ல. அங்கு ரிலீஸ் செய்யும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை, இங்குள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். ஏன் சில சமயம் அதே திரைப்படங்களை இங்கு ரீமேக் செய்வது கூட உண்டு. அந்தப் பட்டியலில் நாம் இப்போது பார்க்கப்போவதுதான் பாபநாசம் திரைப்படம். திர்ஷ்யம் என்னும் பெயரில் மலையாளத்தில் இது வெளியானது.
அங்கு மோகன்லால் படத்தின் கதாநாயகனாக நடிக்க, மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருந்தனர். ஜீத்து ஜோசப் இதனை இயக்கி இருந்தார். எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு கொலை, அந்த வழக்கிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் குடும்ப தலைவன் என்ற ஒன்லைனை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டிருந்தது.
மிகவும் விறுவிறுப்பாகவும், ரசிகர்கள் இருக்கையின் நுணுக்கி வரும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததாலும் திர்ஷ்யம் அங்கு வாகை சூடியது. இதனைத் தொடர்ந்து தமிழில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்தார் ஜித்து ஜோசப். இதில் கமல்ஹாசன் கதையின் நாயகனாக நடிக்க, பாபநாசம் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது.
படத்தின் கனமான கதாபாத்திரத்தை உணர்ந்து, அதில் கச்சிதமாக தன்னைப் பொருத்தி சுயம்பு லிங்கம் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் கமல்ஹாசன். நெல்லை வட்டார வழக்கு மொழியில் மிக சகஜமாக பேசி அவர் நடித்த ஒவ்வொரு காட்சிகளும், திரையரங்குகளில் விசில் பறக்க விட்டன. சொல்லப் போனால் மோகன்லாலை விட கமல்ஹாசன் நன்றாக நடித்திருப்பதாகவே பலர் கருத்து கூறினர்.
இப்படியான சூழலில் அந்த திரைப்படத்தில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் நடிக்க இருந்ததாக அதன் இயக்குனர் ஜோசப் கூறி இருக்கிறார். படத்தில் போலீசார் அடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால் ரஜினி ரசிகர்களுக்கு இது பிடிக்காது என்று நினைத்தேன். அதன்பிறகு கமல்ஹாசன் படத்திற்குள் வந்தார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மலையாளத்தில் திர்ஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது பாகமும் வெளியிடப்பட உள்ளது.





