நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கனவே அனிருத் இசையில் இந்த திரைப்படத்தில் இருந்து சிக்குடு பாடலின் முன்னோட்டம் மட்டும் வெளியானது. ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோ ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் ரஜினியின் நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தன. பலர் இது தொடர்பான வீடியோவை தங்கள் இன்ஸ்டா வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் அனிருத்தையும் பாராட்டி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு தேவா என்னும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஜெயிலர் வேட்டையன் போலவே இந்த திரைப்படத்திலும் மல்டி ஸ்டார்கள் நடிக்கிறார்கள். பான் இந்தியா திரைப்படம் என்பதால், பிற மாநில ரசிகர்களையும் கவர்வதற்காகவே இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்திலிருந்து சோபின் சபீர், கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, ஹிந்தியில் இருந்து அமீர் கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். இதில் இருவரும் நண்பர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. மிக முக்கியமாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் இடம்பெற்று இருக்கிறார்.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இதன் பிறகு ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிலர் அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் என்று கூறினார்கள். ஆனால் அதுதான் இல்லையாம். அவர் அடுத்ததாக சூட்டோடு சூட்டாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ப்ரொமோ சூட் அண்மையில் நடைபெற்று இருக்கிறதாம். ஒட்டுமொத்த திரைக்கதையையும் முடித்திருக்கும் நெல்சன், ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் புதிய நடிகர் நடிகைகள் யாரும் உள்ளார்களா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





