நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாகிறது. தசெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரியாக, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார்.
வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், இப்போது விசாகபட்டிணத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்ட அவக்கு, இதயத்தில் இருந்து வெளியே வரும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டண்ட் வைத்து, அந்த வீக்கம் சரி செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
டாக்டர்களின் முழு கண்காணிப்பில் மருத்துவமனையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்னும் ஓரிரு தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டில் சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு டாக்டர்கள் அனுமதித்தால் மட்டுமே மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார். அதற்கு ஓரிரு மாதங்கள் கூட ஆக வாய்ப்புள்ளது.
ஆனால் வருகிற 17ம் தேதி கூலி படம் ஷூட்டிங்கில் ரஜினி கலந்துக்கொள்வதாக இருந்தது. இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதனால் ரஜினிகாந்த் பழைய நிலைக்கு திரும்பிய பிறகே கூலி படப்பிடிப்பில் அவர் கலந்துக்கொள்வார். அதுவரை மற்ற நடிகர்கள், ரஜினி இல்லாத காட்சிகளை மட்டுமே லோகேஷ் படம் பிடிக்க முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கூலி படத்தை மார்ச் மாதத்துக்குள் முடித்துவிட்டு ஏப்ரல் மாதம் கார்த்தி நடிப்பில் கைதி 2 படப்பிடிப்பை துவங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார். கைதி படத்தை போலவே, அதன் 2ம் பாகத்தையும் 50 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். கைதி 2 படத்தில் சூர்யாவும் நடிக்க இருந்தார். ஆனால் இப்போது ரஜினிகாந்த் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், கூலி படப்பிடிப்பு அதிக நாட்கள் நடக்கும். கைதி 2 படப்பிடிப்பை ஏப்ரலில் துவங்க முடியாத சிக்கலில் லோகேஷ் அப்செட்டில் இருக்கிறார்.





