தமிழ் சினிமாவில் இதுவரை நான்கே நான்கு திரைப்படங்கள்தான் இயக்கியிருக்கிறார் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என இந்த மூன்று திரைப்படங்களும் விமர்சன ரீதியாக ஏற்ற இறக்கங்கள் பெற்றிருந்தாலும் கமர்சியலாக சக்கை போடு போட்டது.
வசூலில் எந்த ஒரு குறையையும் இந்த திரைப்படங்கள் வைக்கவில்லை. இப்படியான சூழலில்தான் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் ஜவான் திரைப்படத்தை கொடுத்தார். பான் இந்தியா காவியமாக எடுக்கப்பட்ட இது, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழில் எடுபடவில்லை என்றாலும், ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இந்த திரைப்படம் சாதனை படைத்தது. தமிழிலிருந்து ஹிந்தி மொழிக்குச் சென்று அத்தனை கோடி ரூபாய் வசூல் செய்த பெருமையையும் அட்லி பெற்றார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அட்லி, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் கைகோர்த்து இருக்கிறார். மிகப் பிரமாண்டமான முறையில் திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எனும் இலக்கை நோக்கி இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அறிவியல் மற்றும் வரலாற்று கதையை மையப்படுத்தி இதனை இயக்குகிறார் அட்லி.
இதில் அல்லு அர்ஜுனுக்கு மூன்று கதாபாத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது. தாத்தா அப்பா மற்றும் மகன் கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடிக்கிறாராம். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. வி எப் எக்ஸ் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி ஆகியோர் பணிகளில் ஈடுபட்டனர்.
ராஷ்மிகா மந்தனா, மிருணாள் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மும்பையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் புதிதாக ரம்யா கிருஷ்ணனும் இணைந்து இருக்கிறாராம். அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை அட்லி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





