நடிகர் ரவி மோகன், கெனிஷாவின் நெருங்கிய நட்பு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் ரவி மோகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்தனர். நான் வாழ்வதே என் பிள்ளைகளுக்காக மட்டுமே. நான் என் மனைவியை மட்டுமே பிரிந்தேன். பிள்ளைகளை அல்ல.
கெனிஷா பிரான்சிஸ் என் நண்பராக இருந்தவர். நான் நீரில் மூழ்கும்போது என்னை காப்பாற்ற முயற்சித்தவர். பணம் வாகனம் ஆவணங்கள் ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது எனக்காக நின்றவர் கெனிஷா.
சூழ்நிலையை உணர்ந்து தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டு வந்தவர். நான் சட்டரீதியாக உணர்ச்சிரீதியாக பணரீதியாக போராடிய போது அனைத்திலும் அவர் துணை நின்றார். நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர்தான்.
அவரின் நடத்தை தொழிலை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையைக் கேட்டு நிமிடத்தில் எனக்கு ஒரு தோழியாக மட்டுமே உதவ வேண்டும் என்று கூறினார். எனது வாழ்நாளில் என்னை உண்மையில் புரிந்து கொண்டவர்கள் யார், என்னை பயன்படுத்தியவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.
சமீபநாட்களாக சமூக வலைதளங்களில் என் மீதும் என் தோழியின் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் மனவேதனையை தந்தது. நானும் பல வேதனைகளை அனுபவித்தேன். அந்த வாழ்க்கைக்குள் மீண்டும் செல்ல விரும்பவில்லை. இதுவே என் கடைசி அறிக்கை.
ஆனால் இதையும் அவர்கள் பெரிதாக்குவார்கள். ஒரு குடிமகனாக சட்டத்தை மதிக்கிறேன். நான் இப்போது எடுத்த முடிவுகளால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறேன். இதற்கு முன் என் வாழ்வில் இவ்வளவு நிம்மதியை உணர்ந்ததில்லை. வாழுங்கள் வாழ விடுங்கள் என்று நடிகர் ரவி மோகன் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.





