ரவி மோகன் தற்போது கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். டாடா திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த கணேஷ் கே பாபு தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. அதிலும் வடசென்னையை பிரதானப்படுத்தி இருக்கும் இயக்குனர், அங்கிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான கதையை தான் படமாக எடுத்து வருகிறார்.
இதன் அறிமுக வீடியோவே பலரது கவனத்தையும் எடுத்தது. அதில் சட்டப்பேரவையில் கே.எஸ் ரவிக்குமார், ரவிமோகன் உள்ளிட்டோர் உரையாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தன. தற்போது இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. கராத்தே பாபு படம் தனது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஏற்கனவே ரவி மோகன் கூறியிருந்தார்.
இதுபோக ஜீனி என்னும் திரைப்படத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார். முழுக்க முழுக்க பேண்டஸி கலந்த திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த புவனேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட மூன்று ஹீரோயின்கள் இதில் இருக்கிறார்கள்.
ரவி மோகன் நடித்த திரைப்படங்களிலேயே இது அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜீனி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது. இதுபோக பராசக்தி திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு அவர்தான் வில்லன்.
இப்படி ரவி மோகனுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்க, அவர் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளார். நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை வைத்துதான் அவர் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக ரவி மோகன் ஸ்டுடியோ என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்துள்ளார்.
இதில் முதல் திரைப்படத்தை கார்த்தி யோகி இயக்குகிறார். இவர் ஏற்கனவே சந்தானத்தை வைத்து டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது ரவி மோகனை வைத்து கார்த்தி யோகி இயக்கும் திரைப்படத்திற்கு, bro code என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ் ஜே சூர்யாவிற்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.





