தமிழ் சினிமாத் துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போல, மலைாள சினிமாத் துறையில் மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா சங்கம்) உள்ளது. மறைந்த காமெடி நடிகர் இன்னொசென்ட் இந்த சங்கத்தில் பல ஆண்டுகளாக தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு பின் அம்மா சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் இருந்து வருகிறார்.
மலையாள சினிமா என்றாலே யதார்த்த கதைகளை கொண்டதாகவும் மனம் கவர்ந்த அழுத்தமான கேரக்டர்களை கொண்டும் உருவாகி இருக்கும். தமிழ் சினிமா போல அங்கு ஹீரோயிசம் காட்டி ரசிகர்களை ஏமாற்ற முடியாது. கதா பாத்திரங்களுக்குதான் நடிகர்களே தவிர, நடிகர்களை தூக்கிப் பிடிக்கும் கதைகளுக்கு அங்கு வேலை இல்லை.
அதே நேரத்தில் கடந்தாண்டில் ஹேமா கமிஷன் வெளியிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த அறிக்கை, பெரிய அளவில் பாதிப்பை பரபரப்பை மலையாள சினிமாவில் ஏற்படுத்தியது. இயக்குனர்கள், நடிகர்கள் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் (அம்மா) தலைவர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நிர்வாக கமிட்டி சார்ந்த 16 உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் அம்மா சங்கம் கலைக்கப்பட்டது. விரைவில் மீண்டும் அம்மா சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க உள்ளது. எனினும் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சங்க பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள சினிமாத்துறையில் வயதில் மூத்த, மிகவும் வயதான நடிகர்களுக்கான ஓய்வு கிராமம் என்ற திட்டத்தை அம்மா சங்கம் கொண்டு வந்துள்ளது. வயதான நடிகர்கள் அவர்களது கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க அம்மா சங்கம் சார்பில் அவர்களுக்காக ஒரு கிராமத்தை உருவாக்கித் தரும் திட்டம் குறித்த ஆலோசனையை நடிகர் மோகன்லால் கொண்டு வந்தார்.
அதை மம்முட்டி சுரேஷ்கோபி ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் வரவேற்று ஆதரவு தந்த நிலையில், இந்த திட்டத்துக்கு சஞ்சீவினி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளை இப்போது மலையாள நடிகர் சங்கம் துவங்கியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மலையாள மூத்த நடிகர்களுக்கான ஓய்வு கிராமம் துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் சுரேஷ் கோபி நடிகை மஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





