அடிகொடுத்த கைப்புள்ளைக்கே உடம்புல இவ்ளோ காயம்ன்னா, அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நினைக்கறியா, என்று வின்னர் படத்தில் படுகாயங்களுடன் இருக்கும் வடிவேலுவை பார்த்து 2 பேர் பேசிக்கொண்டே செல்வார்கள். அதைக்கேட்கும் வடிவேலு, இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களேடா என்று நொந்து போய் பேசுவார். அதுபோல்தான் மேலே உள்ள தலைப்பை பார்த்தால் நடிகர் கமல்ஹாசனோ, இயக்குனர் ஷங்கரோ நொந்து போய் பேசுவார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால், இந்தியன் 2 வருவதற்கு முன்பே இந்தியன் 1 படத்தில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. எல்லோரும் இந்தியன் 2 மோசம், மோசம் என்கின்றனர். முதலில் மிகப்பெரிய தவறை செய்த இந்தியன் 1 படம் குறித்து யாருமே பேச மறுக்கிறார்கள். அந்த தவறை பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். இந்தியன் 1 கிளைமாக்ஸில் மகனைக் குத்திக் கொன்ற தாத்தா சேனாபதியும் அந்த தீயில் சிக்கி இறந்திருந்தால் இந்தியன் 2 படமே வந்திருக்காதே, என்று பயங்கரமாக கலாய்க்கின்றனர்.
கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியன் 2 படத்திலும் கமல்ஹாசன் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. அவருக்கு சர்க்கஸ் கோமாளி போல் ஆறேழு கெட்டப்புகளில் கொடுமையான மேக்கப்பை செய்து, அவரது நடிப்பே ரசிகர்களுக்கு தெரியாத வகையில், ஷங்கர் சிறப்பாக பணி செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில், எஸ்ஜே சூர்யாவாக நடித்திருப்பதும் கமல்தானோ என்று ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு மாறுபட்ட மேக்கப்களில் கமல் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். லாஜிக் இல்லாத கதை, கதை இல்லாத பிரமாண்டம் என மிக மோசமான ஒரு படமாக இந்தியன் 2 இருப்பதாக, டைரக்டர் அமீரும் தன் பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் இந்த மொக்கை படத்தையும், இதுபோல் தமிழில் இதுவரை ஒரு படம் கூட வந்தது இல்லை என்று கமலுடன் தொடர்பில் இருக்கும் சில ஜால்ரா கலைஞர்கள் பேட்டி கொடுப்பதும், இந்தியன் 2 படத்தை பெருமையாக பேசுவதும் படம் பார்த்த மற்றவர்களை கடுப்படைய செய்கிறது.
கமல்ஹாசனின் மிக தீவிர ரசிகரான காமெடி நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில், எங்கள் ஆழ்வார்பேட்டை நாயகன் அடுத்த தேசிய விருதுக்கு தயாராகி விட்டார். ஆஸ்கார் விருது கதவை உடைக்கப் போகிறார். இந்த படம் 1500 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும். இனி தமிழ் சினிமாவை, கமல் சினிமா என்று பேசியிருக்கிறார். நடிகர் வையாபுரியும் இந்தியன் 2 படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்திருக்கிறார். கொடுத்த காசுக்கு மேல கூவறாங்களே என நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.





