நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படம் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். மிக விரைவில் அதற்கான படப்பிடிப்பு, துவக்க விழா பூஜையுடன் நடக்க இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2, அடுத்து சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஐசரி கணேஷ் படத்தயாரிப்பு நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அந்த படங்கள் என்ன, இயக்குனர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதற்கிடையே இயக்குனர் அட்லி, இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி ராஜா ராணி என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றார். தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி டைரக்டர்களில் ஒருவரானார்.
தொடர்ந்து இந்தியில் பதான் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த ஷாருக்கான், தனது அடுத்த படத்தை இயக்க, இயக்குனர் அட்லிக்கு வாய்ப்பளித்தார். ஜவான் என்ற சூப்பர் ஹிட் படத்தை தந்த அட்லி, இப்போது இந்தியில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக உள்ளார். ஒரு படத்தை இயக்க அட்லி சம்பளம் ரூ. 100 கோடியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் அட்லி இயக்குவதற்கு கமிட் ஆகி இருக்கிறார். முன்னதாக, ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கும் சல்மான் கான், அந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்தான் 2 ஹீரோக்களில் ஒருவராக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுவது மிகவும் தவறான தகவல். அப்படி ஒரு விஷயம், பேச்சுவார்த்தை எதுவுமே இயக்குனர் அட்லி தரப்பில் இருந்து நடக்கவே இல்லை. சல்மான் கான் படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது இந்தி படம் என்பதால், அதில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பும் இல்லை. அட்லி தரப்பிலும் அப்படி ஒரு ஐடியாவும் இல்லை என்பது இப்போது உறுதியாகி உள்ளது என்ற தகவலை, மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி உறுதிப்படுத்தி உள்ளார்.





