விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 2019ம் ஆண்டில் நடந்த சீசன் 3ல் பங்கேற்றவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் தங்கி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக நீதிபதி ஒருவரின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதல் விவகாரத்தில் இரண்டு தரப்பும் போலீசில் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனை நேற்று கைது செய்திருக்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. சனம் ஷெட்டியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றவர்தான். அப்போது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பே தர்ஷனுக்கு சனம் ஷெட்டிதான் பெற்று கொடுத்தார் என்றும் கூறப்பட்டது.
நிச்சயதார்த்தம் இருவருக்கும் நடந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்தது அந்த நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அவர்கள் திருமணம் நடக்காமல் நின்று போய்விட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் தர்ஷன், பார்க்கிங் பிரச்னையில் போலீசார் அவரை கைது செய்திருப்பது குறித்து சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, தர்ஷன் கைது என்ற செய்தியை கேட்டதும் எனக்கு ஒரு நொடி சந்தோஷமாக இருந்தது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் எனவும் யோசித்தேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கின்றனர். விசாரணையே திங்கள்கிழமை அன்றுதான் நடக்கும். மருத்துவமனையில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வதுதான் உண்மை என்றால் சிசிசி டிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே, தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று சனம் ஷெட்டி தற்போது தர்ஷனுக்கு ஆதரவாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.





