லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா, சோபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த்திற்கு தேவா என்னும் கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் எடுக்கப்பட்டன. இதற்கு முன்னதாக தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் போதை மற்றும் கஞ்சா வஸ்துகளை மையப்படுத்திய காட்சிகளை வைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால் இந்த திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு காட்சியும் வராது என்று உறுதியாக கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதேபோல, இது எல்சியூவுக்குள் வராது என்றும் தெரிவித்து இருந்தார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது காவாலயா பாடல் தான். பட்டித் தொட்டி எங்கும் அந்த பாடல் பெற்ற ஹிட் அடிக்க, தமன்னா அதில் குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த ஃபார்முலாவை தான் தற்போது தனது திரைப்படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியிருக்கிறார். இதுபோக படத்தில் இருந்து வெளியான சிக்குடு பாடலும் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தின் டீசர் மார்ச் 14ஆம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் என்பதால் நிச்சயம் டீசர் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை தயாரிப்பு நிறுவனம் தவிடு பொடியாக்கிவிட்டது. டீசருக்கு பதில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே பகிரப்பட்டன.
கூலி திரைப்படத்திற்கு பிறகு கைதியை எடுக்க தான் லோகேஷ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது, அந்தப் பணிகளை ஒத்திவைத்துவிட்டு புதிய திரைப்படத்தை இயக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் அவர் இணைய இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே கூலி திரைப்படத்தில் அவர் நடித்திருப்பது உறுதியாகிவிட்டது. இந்த சமயத்தில்தான் இருவரும் அடுத்த திரைப்படத்தில் சேர்வது குறித்து பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிறகு 2026 ஆம் ஆண்டு அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.





