அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். அவர் அதற்கு முன்னதாக ஆடுகளம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்திருப்பார். இருந்தாலும் அட்டக்கத்தி திரைப்படமே அவரை திரையுலகில் வெளிச்சத்திற்கு அழைத்து வந்தது.
பா ரஞ்சித்தின் முதல் படமான இதில், அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் தினேஷ். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடந்து வரும் காதல் பயணத்தையும், அவனது இளம் வயது குறும்புகளையும் ரசனையோடு இந்த திரைப்படத்தில் ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார்.
ரஞ்சித்தின் இயக்கத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தி தனது நடிப்பின் மூலம் மிகச் சிறந்த பாராட்டைப் பற்றி இருந்தார் தினேஷ். இதன் காரணமாகவே அவர் அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தினேஷிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது விசாரணை.
வெற்றிமாறன் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில், ஒரு அப்பாவி இளைஞனாக கடைசி வரைக்கும் நம் முன்னே வாழ்ந்தார் தினேஷ். காவல்துறையின் குரூர முகத்தை காட்சிப்படுத்தியதில் விசாரணை திரைப்படம் வேறு லெவலுக்கு சென்றது.
தொடர்ந்து குக்கூ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனக் குறிப்பிட்டத்தக்க படங்களில் நடித்து வந்த தினேஷிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது லப்பர் பந்து திரைப்படம். அட்டக்கத்தி தினேஷ் என்ற பெயரை கெத்து தினேஷ் என மாற்றும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் அமைந்தது.
கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்து சக்கை போடு போட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் ஜே பேபி மற்றும் லப்பர் பந்து என இரண்டு கவனிக்கத்தக்க திரைப்படங்களில் தினேஷ் நடித்திருக்கிறார். இந்த சூழலில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதற்கு தண்டகாரண்யம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய ஆதிரா ஆனந்த் தான் இந்த படத்தை எடுக்கிறார். இதில் கலையரசன் ராணுவ வீரராக வருகிறார். படத்தின் முதல் போஸ்டரே அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இருக்கிறது.





