நடிகர் சந்தானம், விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடியாக நடித்து அதன்மூலம் கிடைத்த பிரபலத்தால் சினிமாவில் நடிக்க வந்தவர். காமெடி நடிகர்கள் என்றாலே வசனங்கள் பேசிதான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் வாயால் வாழ்ந்த காமெடியன்களில் ஒருவர்தான் சந்தானம்.
ஏனெனில் கவுண்டமணி, வடிவேலு, விவேக் என காமெடி நடிப்பில் முன்னிலைக்கு வந்த அனைவருமே அவரவர் ஸ்டைலில் பேசி ரசிகர்களை கவர்ந்தார்கள். அந்த வகையில் கவுண்டமணி கோமுட்டி தலையா, டிபன் பாக்ஸ் மண்டையா என ஏதேதோ பேசி ரசிகர்களை சிரிக்க வைத்து விடுவார்.
அதே போல் வடிவேலு நடிப்பிலும் அவர் பேசும் டயலாக்குகள் தான் இப்போது நிறைய மீம்ஸ்களாக வந்துக்கொண்டு இருக்கின்றன. மாப்பு வெச்சுட்டான்யா ஆப்பு, இது வேற வாய், இது நாற வாய் என்றெல்லாம் பேசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். விவேக் பேசும் வசனங்களில் டயலாக் டெலிவரியில் சற்று மிமிக்ரி கலந்து இருக்கும். கொஞ்சம் கருத்துகளையும் அவ்வப்போது தன் பேச்சில் கலந்து அடித்து விடுவார்.
அதேபோல்தான் நடிகர் சந்தானமும் வாய் பேசியே தன் வாழ்க்கையை வெற்றிப்பாதையில் அமைத்துக் கொண்டவர். ஆனால் இப்போது அதுவே அவருக்கு வினையாகி விட்டது. நடிகர் ஆர்யாவும் அவருக்கும் நெருங்கிய நண்பர்கள். பல படங்களில் அவர்களது காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஏற்கனவே சந்தானம் நடித்த சில படங்களை, நடிகர் ஆர்யா தயாரித்து இருக்கிறார். அவருக்கு பைனான்ஸ் ரீதியாக உதவி வருவது, நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்பி சவுத்ரிதான். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர்தான் ஆர்பி சவுத்ரி. ஆனால் நடிகர் சம்பள விஷயத்தில் கறாராக நடந்துக்கொள்வார். 10 கோடி ரூபாய் நடிகர் சம்பளம் என்றால் 2 கோடி ரூபாய் தருகிறேன் என்பதுதான் அவரது வழக்கம்.
இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம் உருவாகிறது. இதில் சந்தானம் நடிக்க, ஆர்யா தயாரிக்கிறார். இதற்கான தொகையை ஆர்பி சவுத்ரிதான் ஆர்யாவுக்கு தருவதாக இருந்தார். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய சந்தானம், ஆர்பி சவுத்ரி பெயரை குறிப்பிடாமல், பயங்கரமாக அவரை கலாய்த்து பேசியிருக்கிறார். இதற்கு ஆர்யாவும் கைகொட்டி ரசித்துசிரித்திருக்கிறார். இதையறிந்து கடுப்பான ஆர்பி சவுத்ரி, டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தை தயாரிக்க பணம் இல்லை என்று ஆர்யாவுக்கு மறுத்து விட்டார். தன் வாய் மூலம் தனது படத்துக்கும், தன் நண்பனுக்கும் சேர்த்து ஆப்பு வைத்து விட்டார் நடிகர் சந்தானம்.





