அறம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். அறம் படத்தில் ஆழ்குழாய் கிணறுக்குள் விழும் குழந்தைகளை காப்பாற்றுவது குறித்து அற்புதமான கருத்துள்ள படத்தை இயக்கியவர். ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது, ஏஆர் முருகதாஸ் நான் கூறிய கதையை ஏமாற்றி, கத்தி படத்தை இயக்கி விட்டார் என்றும் போராடியவர் கோபி நயினார்.
இப்போது நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி என்ற படத்தை கோபி நயினார் டைரக்ட் செய்திருக்கிறார். நடிகர் ஜெய் நடிக்கும் கருப்பர் நகரம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி உள்ளிட்டோ நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அமரன் படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடித்த அமரன் படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்று கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது.
ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தைப் பற்றி யாருமே பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இப்படத்தின் திரைக்குப் பின்னும் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது. ஒருவன் ஒரு குழந்தையை தன் துப்பாக்கியால் ஒரே குண்டில் சுட்டுக் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனை கண்ட தாய் துடிதுடிக்கிறாள்.
இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக கொல்கிறார், அது குழந்தை என்பதால் 2, 3 குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என, ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர்.ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்த குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பது பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும், அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன். அமரன் திரைப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. லட்சக்காணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று முடித்திருக்கிறார். இயக்குனர் வசந்த பாலனும் காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமல் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே எனக் கூறியிருக்கிறார். இப்போது அமரன் படம் குறித்த இவர்களது பார்வையும் இந்த விமர்சனமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.





