மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2023ம் ஆண்டில் வெளியான சிறந்த படைப்புகளுக்கான 71வது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று மாலை டில்லியில் அறிவிக்கப்பட்டது.
இதில் திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. அந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சுவாமி ஆகியோர் இந்த விருதை பெறுகிறார்கள். உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்ற படம் லிட்டில் விங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் குக்கூ ஜோக்கர் போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் மற்றும் திலானி ரபிந்திரன் தயாரித்த இந்த குறும்படத்தை இயக்கியவர் நவீன். ராஜூமுருகனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கந்தர்வன். கந்தர்வனின் சனிப்பிணம் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த லிட்டில் விங்ஸ் குறும்படம் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் சரவணமருது செளந்தர பாண்டி. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2023ம் ஆண்டில் தனது மனைவியுடன் சரவண மருது தகாத உறவில் இருந்ததாக கூறி சக்திவேல் என்பவர் தனது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவணன் மருதுவை கொலை செய்து விட்டனர். அவரது உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்தனர்.
இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வீட்டை விட்டு சென்ற சரவண மருதுவை காணவில்லை என்று அவரது சகோதரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சரவண மருதுவை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த சூழலில் லிட்டில் விங்ஸ் குறும்படத்தை ஒளிப்பதிவு செய்த சரவண மருதுவுக்கு நேற்று சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் சரவண மருதுவுக்கு சிறந்து ஒளிப்பதிவாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





