திரைப்படங்களில் பணியாற்றும் போது ஹீரோக்கள், ஹீரோயின்கள் இடையே மட்டும் காதல் பிறப்பதில்லை. சில சமயங்களில் ஹீரோயின்கள், டைரக்டர்கள் மீதும் காதல் கொண்டு பின்னாளில் அவர்களை திருமணம் செய்த சம்பவங்கள் பலவற்றை தமிழ் சினிமா கண்டுள்ளது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திர தம்பதிகள் பெரும்பாலானோர் வாழ்க்கையையும், சினிமாவையும் பேலன்ஸ் செய்து இரண்டிலும் வெற்றியுடன் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ, ஏதேனும் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றை தொலைத்துவிடுவார்கள்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்தவர்கள் தான் இயக்குநர் செல்வராகவன் – நடிகை சோனியா அகர்வால். செல்வராகவனால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சோனியா அகர்வால், அவரது இயக்கத்திலேயே காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தமிழில் குறிப்பிடப்படும் படியான சில படங்களில் நடித்த சோனியா அகர்வால், பின்னர் 2006ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012ஆம் ஆண்டில் இருவரும் முறைப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். அதன்பின் மீண்டும் அவ்வபோது படங்களில் நடித்துவரும் சோனியா அகர்வால், சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகின.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் எதற்காக செல்வராகவனை பிரிந்தேன் என்பது குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், எங்களது திருமணம் ஏன் விவாகரத்தில் முடிந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இயக்குநர் செல்வராகவன் பிடிவாதம் குணம் கொண்டவர். ஆனால் வீட்டில் அப்படியில்லாமல் அமைதியான தன்மை கொண்டவராக இருப்பார்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது கடினம். வாழ்க்கையில் எப்போதும் நான் மீண்டும் அவர் முகத்தில் முழிக்க மாட்டேன். அவர் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதைப் போல, நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
எங்களுக்கு திருமணம் முடிந்த சமயத்தில் என்னை நடிக்கக் கூடாது என அவர் வீட்டில் கண்டிஷன் போட்டனர். அதனால் சினிமாவை விட்டு விலகி மன உளைச்சலுக்கு ஆளானேன். பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கும் செல்வராகவன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் என்னை விவாகரத்து செய்யுமா டார்ச்சர் செய்தனர். அதன்பின் எங்களுக்கு விவாகரத்து நடந்து மீண்டும் நடிக்கத் தொடங்கினேன் என்றார்.





