ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்னும் பெயருக்கு உதாரணமாக திகழ்ந்தவர் இயக்குனர் சங்கர். தான் இயக்கும் எந்த திரைப்படம் ஆக இருந்தாலும் சரி, அதில் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்ட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக பணியாற்றுவார் ஷங்கர்.
ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர், தற்போது வரை தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பெரிய மெனகெடல்களை மேற்கொண்டு வருகிறார். இந்தியன் முதல்வன் காதலன் சிவாஜி என அவர் இயக்கத்தில் வெளியான அத்தனை திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றன.
முக்கியமாக எந்திரன் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் சங்கர். இவரது இயக்கத்தில் சுஜாதாவின் வசனங்களும் கதையும் மிகவும் கூர்மையாக இருந்ததால் இவர்கள் கூட்டணியில் தொட்ட அதனை திரைப்படங்களும் வெள்ளி விழா கண்டன. சுஜாதா மறைந்து விட்ட சூழலில் தற்போது கவனிக்கத்தக்க திரைப்படங்களை கொடுப்பதில் இருந்து சங்கர் தவறிவிட்டார் என்றே கூறலாம்.
விக்ரம் நடித்த ஐ திரைப்படமே இதற்கு ஒரு சாட்சி. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் அதனை பூர்த்தி செய்ய தவறியது. முன்னோட்டத்தில் அவ்வளவு பிரம்மாண்டத்தை காட்டி விட்டு அதனை படத்தில் செய்யவே இல்லை என்று பலரும் கூறி வந்தனர். மற்றொருபுறம் சங்கர் பாடல்களுக்கு மட்டுமே பிரம்மாண்டத்தை காட்டுவதாகவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும் பேசினர்.
இப்படியான சூழலில் கமல்ஹாசன் உடன் அவர் இணைந்து எடுத்த இந்தியன் 2 திரைப்படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களும், ஓடிடி தளத்தில் கண்டவர்களும் அதனை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். சொல்லப்போனால் இணையத்தில் இந்தியன் 2 ஒரு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
இந்நிலையில்தான் சங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கதை. இதனால் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், டீசரில் வழக்கம் போல பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அது மட்டுமே இருப்பதாகவும், மற்றபடி எந்தவித மெனக்கெடலும் படத்தில் தெரியவில்லை என்றும் டீசரைப் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தெலுங்கில் இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.





