கடந்த 25 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு திரைப்படம் திரைக்கு வரும் வரை அந்த படம் குறித்த பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியாது. அப்படி திரைக்கு வரும் புதிய படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் கூறும் விமர்சனம் தான் மற்றவர்களை அந்த படம் பார்க்க தியேட்டர்களுக்கு வரவழைக்கும்.
அப்படிதான் அந்த காலகட்டத்தில் திரைப்படங்களின் வெற்றி என்பது இருந்தது. ஆனால் இப்போது சமூக வலைதளங்களின் தாக்கம் நிறைந்துள்ள சூழலில் ஒரு படம் உருவாகும் முன்பே அந்த படம் குறித்த யூகங்களும் தகவல்களும் வெளியாகி வருகின்றன. மேலும் படக்குழு சார்பிலேயே தொடர்ந்து படம் குறித்த பல அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க படம் ரிலீஸாகி தியேட்டரில் முதல் காட்சி முடிவதற்கு முன்பே அந்த படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. இதில் மொக்கை காட்டு மொக்கை என்று ஒரே வார்த்தையில் அந்த படத்தை விமர்சித்து காலியாக்கி விடுகின்றனர். தொடர்ந்து படங்கள் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அந்த படத்தை ஓரிரு தினங்கள் கூட ஓட முடியாமல் செய்து விடுகிறது.
இந்த நிலையில் புதுமுக இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படமும் புளித்த மாவில் அரைத்த கதை என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தாலும் கதைக்களம் விறுவிறுப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் சிக்மா. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். மேலும் ஃபரியா அப்துல்லா ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த 2ம் தேதி வெளியானது. சிக்மா படத்துக்கு எதிராக வேண்டுமென்று சிலர் எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக படத்தின் நாயகன் நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தீப் கிஷன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக எனக்கும் என் படத்துக்கும் எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறை பதிவுகளை பார்த்து வருகிறேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். என்னை விட உங்களுக்கு தான் இழப்பதற்கு அதிகம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விஷயம் வெளிவந்தால் அனைவரும் சிக்கிக் கொள்வீர்கள் என்று அந்த பதிவில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





