சினிமாவில் ஒரு டிரண்டிங் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதாவது ஒரு இயக்குனர் மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்துவிட்டால், உடனே அவரை முன்னணி நடிகர்கள் போனில் அழைத்து நேரில் பாராட்டுவார்கள். உடனடியாக எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்கள் என்பார்கள். உங்களுக்கான கதை இருக்கிறது என்றால், உடனே ஓகே சொல்லி அவர்களை கமிட் செய்து விடுவார்கள்.
அப்படி கமிட் செய்த இயக்குனர்களை சில நடிகர்கள் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே தங்களது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்து படப்பிடிப்பை துவங்கி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர், கமிட் செய்வதோடு அவர்களை காத்திருப்பில் வைத்து விடுவார்கள், தமிழ் சினிமாவில் இது பல இயக்குனர்களுக்கு நடந்திருக்கிறது.
உதாரணமாக, இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமாரை, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வைத்தார் நடிகர் சூர்யா. அதே போல் ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகனை ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருக்க வைத்த கார்த்தி, பிறகு அவரது இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்தார்.
அதே போல், 2018 படத்தை இயக்கிய இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்பை புக் செய்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வைத்தது. அதே போல் தீரன் அதிகாரம் 1, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு படங்களை எச் வினோத்தை, நடிகர் கமல்ஹாசன் பல மாதங்கள் காத்திருக்க வைத்தார். அதே போல் நடிகர் சிலம்பரசன், எஸ்டிஆர் 48 படத்தை இயக்க வாய்பபளித்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பல மாதங்களாக காத்திருக்க செய்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, சிலம்பரசன் நடிக்கும் படத்தை பல மாதங்களுக்கு முன்பே கமிட் ஆனார், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் அந்த முடிவில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் பின்வாங்கி விட்டது.
இப்போது தக்லைப், ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படங்களில் நடிக்க தயாரான சிலம்பரசன், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து அடுத்த 2025ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் வரை காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். இன்னும் ஏறக்குறைய 8 மாதங்கள் காத்திருக்க சொல்லும் அவர் படப்பிடிப்பை துவங்குவாரா, அல்லது இந்த படம் வேண்டாம் என்று கூறுவாரா என்றும் தெரியவில்லை. இப்படி இயக்குனர்களை மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் முடக்கும் சிம்பு போன்ற சில நடிகர்களால், நல்ல படங்களை தர வேண்டிய இயக்குனர்கள் முடங்கிப் போய், தங்களது அடையாளத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.





