நடிகர் அஜீத்குமார் கடந்த 10 நாட்களாக மலேசியாவில் இருக்கிறார். அங்கு நடந்து வரும் எப்4 கார் ரேஸில் அவர் கலந்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிம்பு, கார் ரேஸ் நடந்த பகுதிக்குச் சென்று நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்து பேசினார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மலேசியா சென்ற நடிகர் சிம்பு நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதன்பிறகு ஓட்டல் அறையில் தங்கியிருந்த அவருக்கு, விமானம் நிலையம் செல்லும் வழியில்தான் அஜீத்குமார் பங்கேற்ற கார் ரேஸ் நடக்கும் இடம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நடிகர் சிம்பு விமான நிலையத்துக்கு செல்ல 2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டு கார் ரேஸ் நடக்கும் பகுதிக்கு அஜீத்குமாரை பார்க்க சென்றிருக்கிறார். அதற்கு முன்பே சிம்பு தரப்பில் இருந்து அஜீத்குமாரை பார்க்க வருவதாக பொக்கே அனுப்பி தகவல் சொல்லப்பட்ட நிலையில், அவர்களும் வாங்க என்று கூறிவிட்டனர்.
அப்போது நடிகர் அஜீத்குமாரை நேரில் பார்த்த சிம்பு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். சிம்புவின் கெட்டப்பை பார்த்த அஜீத்குமார் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. இதையே மெயின்டெயின்ட் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது, சிம்பு நீங்க நிறைய படங்களில் நடிக்கணும் என்று அஜீத்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார்.
அப்போது நடிகர் சிம்புவும் நீங்களும் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும் என்று கோரிக்கையாக கூறியிருக்கிறார். அதன்பிறகு நீங்கள் கார் ஓட்டுவதை கேலரியில் அமர்ந்து பார்க்க விரும்புகிறேன் என்று சிம்பு கூறியதால், நடிகர் அஜீத்குமார் அவர் அணியும் டீ சர்ட் தந்து அவரை அழைத்துச் சென்று தனியாக இடத்தில் அமர வைத்து கார் ரேஸ் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
அப்போது அவர்கள் இருவரும் பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள்தான் புகைப்படங்களாக வீடியோக்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்பிறகு விமான நிலையம் வந்த சிம்பு இப்போது கோவில்பட்டியில் இருப்பதாகவும் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ள நிலையில் அவர் சிம்பு பங்கேற்க உள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.





