தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என அழைக்கப்பட்டவர் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர். கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அப்போது டிஆர் படங்கள் என்றாலே தியேட்டர்களில் திருவிழா கூட்டமாக ரசிகர்கள் திரண்டு விடுவார்கள்.
டி ராஜேந்தரின் மகன் சிலம்பரசன், 1 வயது குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தை இயக்கிய படங்களில் நடிக்க வந்துவிட்டார். அப்போதே பாட்டு நடனம் என கலக்கிய அவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கிடைத்து விட்டது. பிறகு காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் இயக்குனர்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஷூட்டிங் சரியாக வருவதில்லை, அதிக சம்பளம் கேட்டு தகராறு செய்கிறார், ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் இயக்குனரை மதிப்பதில்லை, கால்ஷீட் தந்தாலும் நடிக்க வருவதில்லை என பல புகார்கள் அவர் மீது எழுந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிம்புவிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. இப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட் டைமுக்கு வந்துவிடும் சிம்பு சொன்ன நாட்களில் சொன்ன நேரத்தில் காட்சியை நடித்து முடித்து தருகிறார். மேலும் தனது 49 50 மற்றும் 51வது படங்கள் குறித்த அறிவிப்பையும் கடந்த பிப்ரவரி 3ம் தேதி தனது பிறந்த நாளன்று அவரே அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்க இருந்தது. ஆனால் இன்னும் ஸ்கிரிப்ட் பணிகளை இயக்குனர் சரிவர செய்யாததால் 2 மாதங்களுக்கு படப்பிடிப்பை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிம்புவும் இதற்கு ஓகே சொல்லி விட்டார்.
ஆனால் அந்த 2 மாதங்களுக்கு சும்மா இருக்காமல் அவர் அடுத்து நடிக்க உள்ள எஸ்டிஆர் 50 படத்தின் பிரமோ ஷூட்டிங் பணிகளை இப்போது துவங்கி விட்டார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்று படத்திற்கான பிரமோ ஷூட்டிங்கை இந்த 2 மாதங்களுக்குள் முடித்துவிட சிம்பு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இது நம்ம சிம்புதானா என அவரது ரசிகர்களே ஆச்சரியத்தில் உள்ளனர்.





