மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும், எதுவந்த போதிலும் பொதுவென்று வைத்து வாழ்ந்திடுவோரை வாழ்த்திடுவோம் என்று படகோட்டி படத்தில், எம்ஜிஆர் பாடிய கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலில் இடையே இந்த பொன்னான வரிகள் வரும். ஏனென்றால், எல்லோருக்கும் அப்படிப்பட்ட தாராள குணம் வந்துவிடுவது இல்லை.
சினிமா நடிகர்கள் என்றாலே, லட்சங்களில், கோடிகளில் புரளுபவர்கள் என்பது உண்மைதானே தவிர, அது சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துவரும் துணை நடிகர்களுக்கு பொருந்தாது. தினக்கூலி போல தினமும் 500 முதல் 1000 ரூபாய் சம்பளம் வாங்கும் அவர்கள் வசிப்பது வாடகை வீடுகளில்தான். குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் சராசரி வாழ்க்கை தான் அவர்கள் வாழ்கின்றனர்.
இதுபோன்ற நலிந்த கலைஞர்களை தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர நடிகர்களும், நடிகர் சங்கங்களும் தீவிர கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக, வளமாக இருக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்சம் வறுமையில்லாத ஒரு வாழ்க்கை வாழ, அவர்களுக்கு உதவ வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையா மகன் ஜூனியர் பாலையா, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் வசித்தது வாடகை வீட்டில். பொருளாதார சிரமத்தில் கடைசி நாட்களில் தவித்திருக்கிறார். மருத்துவ செலவு, வீட்டுச் செலவுக்கு கூட பணமின்றி, வீட்டு வாடகை கூட முடியாத அவலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்ற அவலச் செய்தி, அவரது மறைவுக்கு பிறகு தெரிய வருகிறது.
மாபெரும் திரைப்பட நடிகர் டிஎஸ் பாலையா மகன் நிலையே இப்படி இருக்கையில், மற்ற நடிகர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். நேற்று காமெடி துணை நடிகர் வெங்கல் ராவ், ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அவரை பக்கவாதம் நோய் தாக்கியிருப்பதாகவும், கை கால்கள் வராத நிலையில், வீட்டுச் செலவு, மருத்துவச் செலவுக்கு கூட பணமில்லை, என்னால் அதிக நேரம் பேசவும் முடியவில்லை என்று தன் வறுமையை சொல்லி இருந்தார்.
அவர் பல படங்களில், காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் நடித்தவர் என்பதால், வடிவேலு இந்த வீடியோ பார்த்தவுடன் முதல் ஆளாக போய் உதவி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை உதவியதாக தகவல் இல்லை. ஆனால், நடிகர் சிலம்பரசனுக்கு இந்த தகவல் காதுகளை எட்டிய நிலையில், உடனடியாக 2 லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு கொடுத்து உதவி இருக்கிறார் சிலம்பரசன். இந்த பெருந்தன்மையான உடனே உதவிய சிம்புவின் உயர்த்த குணத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





