இயக்குனர் ராசுமதுரவன் மாயாண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக படங்களில் எந்த கேரக்டரை ரசிகர்கள் மறந்தாலும் நடிகர் சிங்கம்புலி கேரக்டரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த படங்களில் காமெடி செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தி இருப்பார் சிங்கம்புலி.
அதே போல் கடந்தாண்டில் வெளியான மகாராஜா படத்திலும் நடிகர் சிங்கம்புலி நடிப்பு மிரட்டலாக இருந்தது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய விஜய் சேதுபதியின் 50வது படத்தில் திருடன் கேரக்டரில் சிங்கம்புலி நடிப்பு வேற லெவலில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிகர் சிங்கம்புலி நடிகர் அஜீத்குமார் நடித்த ரெட் படத்தை இயக்கிய இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. அதே போல் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா நடித்த மாயாவி படத்தின் இயக்குனரும் சிங்கம் புலி தான். இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் பிதாமகன் படங்களில் இணை இயக்குனராக சிங்கம்புலி பணிசெய்திருக்கிறார்.
பிதாமகன் ரேணிகுண்டா படங்களின் கதை வசனகர்த்தாவாக இருந்தவரும் சிங்கம்புலிதான். நடிகராக பல படங்களில் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். கோரிப்பாளையம் மிளகா தூங்கா நகரம் அரவான் மனம் கொத்திப் பறவை சைக்கோ நய்யாண்டி ஜன்னல் ஓரம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற பல படங்களில் சிங்கம்புலி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம்புலி கூறியதாவது, மாயாவி படத்துக்கு முதலில் வைத்த பெயர் கூண்டுக்கிளி. அந்த பெயரை வைக்க டிசைன் எல்லாம் பண்ணினோம். அப்போ ஒரு ஆள் வந்து, அந்த காலத்துல எம்ஜிஆர் சிவாஜி ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படம். அப்பவே சரியாக போகல, நீங்க கொஞ்சம் மாத்துங்க, என்று சொல்றார்.
ஒரு அசரீரி மாதிரி அவர் வந்து அப்படி சொல்றார். அதுக்கு அப்புறம் பண்ணின டிசைன் எல்லாம் தூக்கி போட்டுட்டு மாயாவி அப்படீன்னு பெயர் வெச்சோம் என்று சிங்கம்புலி கூறியிருக்கிறார். ஆனால் பெயரை மாற்றிய பிறகும் மாயாவி படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்பதுதான் இதில் இயக்குனர் சிங்கம்புலிக்கு கிடைத்த பலத்த ஏமாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





