தமிழ் சினிமா ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பழம்பெரும் பின்னணிப் பாடகி பி சுசீலா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி இந்தி ஒரியா சமஸ்கிருதம் சிங்களம் என 9 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பி சுசீலா பாடியிருக்கிறார். இதில் 17,695 பாடல்களை தனியாக பாடிய வகையில் அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
பத்மபூஷன் தேசிய விருது, சிறந்த பாடகிக்கான மாநில விருதுகள் ஏராளமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் இசை அரசி என்று போற்றப்படுபவர் பி சுசீலா. வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்றே தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி என பெயர் பெற்றவர்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தனது வாக்கை செலுத்துவதற்காக 90 வயதை கடந்த பி சுசீலா, ஜனநாயக கடமையை செய்யும் உத்வேகத்தில் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவரது தொகுதி சென்னை மயிலாப்பூர் ஆழ்வார்பேட்டை உதவி பொறியாளர் அலுவலகத்தில் இவருக்கான ஓட்டுசாவடி உள்ளது.
பாடகி பி சுசீலா 90 வயதை கடந்தவர் என்பதால் தபால் ஓட்டு மூலம் இவர் ஓட்டை பெற சில தினங்களுக்கு முன்பு தேர்தல் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர். ஆனால் நான் நேரில் வந்து ஓட்டளிக்கிறேன் என்று பி சுசீலா கூறிவிட்டார். அதன்படி நேற்று முன்தின மாலை 3 மணி அளவில் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போடச் சென்றுள்ளார்.
ஆனால் அவரை காரில் இருந்து கூட இறங்க விடாமல், உங்கள் ஓட்டு முத்திரையிடப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம் என்று கூறியுள்ளனர். எனது அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் அனுப்பலாம் என்று பி சுசீலா கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. இவரது ஓட்டை அதிகாரிகளே போட்டு அனுப்பி விட்டார்களா அல்லது ஓட்டு போடாமல் அதை அப்படியே முத்தரையிட்டு அனுப்பினார்களா என்பது கூட தெரியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த பி சுசீலா வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
இதுகுறித்து பாடகி பி சுசீலா கூறியதாவது, என்னுடைய இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட ஓட்டு போடாமல் இருந்தது இல்லை. எந்த ஊரில் இருந்தாலும் ஓட்டு போட வந்து விடுவேன். 90 வயதிலும் ஐதராபாத்தில் இருந்து ஓட்டு போட சென்னைக்கு வந்தேன். ஆனால் என்னால் ஓட்டு போட முடியவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. இதைப் பற்றி யாரிடம் புகார் தெரிவிப்பது என்று கூட தெரியவில்லை என்று மனவேதனையுடன் பி. சுசீலா கூறியிருக்கிறார்.





