நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர். நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால், அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது சினிமா பயணம், ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதே போல் சிவகார்த்திகேயன் இடத்துக்கு கவின் வந்து விடுவார் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் விஜய் பெற்றிருக்கும் இடம் விஜய்க்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு அடுத்ததாக நிற்கலாம். அல்லது அவரை கடந்து போய் நிற்கலாமே தவிர, அவரிடத்தில் யாரும் நிற்க முடியாது. ஏனெனில் விஜய், ரசிகர்களிடம் சென்ற விதத்துக்கும், சிவகார்த்திகேயன் வருவதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.
விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிலம்பரசன், தனுஷ் என யார் வர விரும்பினாலும் அவர்கள் வந்தடைகிற இடம் அவர்களுக்கான இடமாக இருக்கலாமே தவிர, அது விஜய் பெற்ற இடம் என்று யாராலும் சொல்லிவிட முடியாது. இதை சினிமா தியேட்டர் உரிமையாளர்களே வெளிப்படையாக கூறுகின்றனர். விஜய் போன்ற வசூல் மன்னன் யாருமே இனி வர மாட்டார்கள் என்கின்றனர்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படமும், அதைத்தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சிங்க நடை படமும் வெளிவந்த பிறகு அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க திட்டமிட்டுள்ள படம், குட்நைட் படத்தை இயக்கி விநாயக் சந்திரசேகர் படத்தில்தான் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த விநாயக் சந்திரசேகர் திருமண விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், நீங்கள் எப்போது கதை ரெடி என்றாலும் எனக்கு சொல்லி விடுங்கள். உடனே உங்களுக்கு கால்ஷீட் தந்து விடுகிறேன். அதில் எந்த தாமதமும், குழப்பமும் இருக்காது. அந்த உறுதிமொழியை நான் தருகிறேன், என்று மிக உறுதியாக கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏனெனில் இந்த படம் உருவாகி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தால், இசையமைப்பாளர் டி இமான் விவகாரத்தில் சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கறை முற்றிலுமாக நீங்கி, அவருக்கான ஒரு நல்ல வைப், சோஷியல் மீடியாவில் உருவாகும் அளவுக்கு அந்த படத்தின் கதை உள்ளதாம். அதனால் சிவகார்த்திகேயனின் இமேஜே வேற மாதிரி மாறிவிடும் என்பதால், இப்படி ஒரு உறுதியை, குட்நைட் பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தந்திருக்கிறார்.





