சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட மதராசி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்த அந்த திரைப்படம் நிச்சயம் அவருக்கு கம்பேக்காக அமையும் என்று பலரும் கூறி வந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இருப்பினும் முருகதாஸின் முந்தைய தோல்வி திரைப்படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று பலரும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய தரமான திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதனை எடுத்திருக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
அவருக்கு நூறாவது திரைப்படமாக இது அமைந்துள்ளது. முதலில் சூர்யாவை வைத்து, புறநானூறு என்னும் பெயரில்தான் இந்த திரைப்படத்தை சுதா எடுக்க இருந்தார். ஆனால் அந்த திட்டம் கைவிட்டுப் போனதால், சிவகார்த்திகேயனுடன் இணைந்து பராசக்தியாக அதனை உருவாக்கி இருக்கிறார். 1960களில் நடக்கும் காலகட்டம் போல இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே இதன் படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு சிதம்பரம், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் சுதா சூட்டிங் எடுத்தார். இலங்கையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. நடுவே தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.
இந்த திரைப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமாக இருப்பவர் ரவி மோகன். ஹீரோவாக மட்டுமே திரையில் தோன்றி வந்த அவர் இந்த திரைப்படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். அதர்வாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இதன் சூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே வெங்கட் பிரபு முந்தி இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதமே தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.





