டைரக்டர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர்தான் வசந்த் ரவி. அந்த படத்திலேயே இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுக்கும், இவருக்கும் நடக்கும் வாக்குவாதங்கள், குடும்ப பிரச்னை சண்டைகள் எல்லாமே படு எமோஷனலாக இருக்கும். அதில் இருவரது நடிப்புமே மிக சிறப்பாக இருந்தது.
அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், ரஜினியின் மகன் கேரக்டரில் வசந்த் ரவி நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியான அவரை சிலை கடத்தல் மன்னன் வர்மா ( மலையாள நடிகர் விநாயகம்) கடத்திச் சென்று விடுவார். இறுதியில் வசந்த் ரவியும் ஒரு குற்றவாளி என தெரிந்த நிலையில், ரஜினி அவரை சுட்டுக்கொன்று விடுவார். இந்த படத்திலும் வசந்த் ரவி அதிக பாராட்டை பெற்றார்.
இந்நிலையில் கண்ட நாள் முதல், கண்ணாமூச்சு ஏனடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா, இயக்கிய படம்தான் பொன் ஒன்று கண்டேன். இந்த படத்தில் இரட்டை நாயகர்களாக அசோக் செல்வன், வசந்த் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர் உள்ளிட்டோர் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த படம் நேரடியாக டிவியில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் ஒரு படத்துக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆனால் கிடைக்கிற வரவேற்பும், அங்கீகாரமும் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆகும்போது கிடைப்பதில்லை. ஏனெனில் பலரது பார்வையில் படம் படாமல் போய் விடுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த தகவலும் டைரக்டர், நடிகர்கள் என யாருக்குமே தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் வசந்த் ரவி, இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஜியோ ஸ்டுடியோ என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா, பொன் ஒன்று கண்டேன் படம், தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக டிவியில் ரிலீஸ் ஆவது வேதனை, வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து படத்தில் சம்பந்தப்பட்ட யாரிடமும் தெரிவிக்கபடாமல் இப்படி ஒரு அறிவிப்பு மிகுந்த வருத்தம் தருகிறது.
ஒரு படம் குறித்த வணிக ரீதியான விஷயங்களில் நடிகர்கள் தலையிட முடியாது. ஆனாலும் இதுபோன்ற தகவல்களை படக்குழு மூலமாகவோ, நேரடியாக தெரிவித்து இருக்கலாம். இப்படி சமூக வலைதளங்கள் மூலமாக படத்தில் நடித்த எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பது சரியானது அல்ல, என்று அந்த பதிவில் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இப்போது செம வைரலாகி வருகிறது.





