சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். முதலில் இதனை சூர்யாவை வைத்து தான் அவர் இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது. படத்திற்கு புறநானூறு என்ற தலைப்பு வைத்தார்கள்.
சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதில் நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக புறநானூறு திரைப்படம் கைவிடப்பட்டது.
அந்த சமயத்தில் பருத்திவீரன் பிரச்சனை தொடர்பாக அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே வார்த்தை மோதல் எழுந்தது. அதுதான் புறநானூறு திரைப்படம் கைவிடப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தான் இந்த திரைப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு சென்றது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள கட்டடத்தில் இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் சுதா கொங்கரா. இதில் வில்லனாக நடிக்கிறார் ஜெயம் ரவி. கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்க, முக்கியமான ரோலில் வருகிறார் அதர்வா. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பலரையும் கவர்ந்தது.
அதில் மிக முக்கியமாக ஜிவி பிரகாஷின் இசை அற்புதமாக இருப்பதாக பலரும் கூறினார்கள். அவரின் நூறாவது திரைப்படமாக பராசக்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கல்லூரி மாணவர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா வருகின்றனர். இந்தி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு சிபி சக்கரவர்த்தியுடன் தான் சிவகார்த்திகேயன் இணைவதாக இருந்தது. ஆனால் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இதனால் தனது அடுத்த திரைப்படத்தின் கதையை குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன். பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





