ரஜினிகாந்த், விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையான ஃபேமிலி ஆடியன்ஸை தனது கைக்குள் போட்டுக்கொண்டவர். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோதே அவரது நகைச்சுவைக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். அதன் பின் அவர் சினிமாவிற்கு வந்த பிறகு அந்த ரசிகர் கூட்டம் அப்படியே டபுள் ஆனது.

“மெரினா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன் பின் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தார். வழக்கமான பாணியிலேயே எப்போதும் திரைப்படங்களில் நடிக்கிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு சவாலாக இருக்க கூடிய கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.
அந்த வகையில், தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜுலை மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி என்று வெளிவர தயாராக உள்ளது.

இதில் “அயலான்” திரைப்படம் ஏலியனை மையப்படுத்திய ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்தாலும் கிராபிக்ஸ் பணிகளால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருந்தது. எனினும் ஒரு வழியாக வருகிற தீபாவளி அன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் முனீஸ்காந்த், சிவகார்த்திகேயன் குறித்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிந்தபோது அந்த படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராவிதமாக ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டதாம். இந்த விபத்தில் டெக்னீஷியன் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்களாம்.

அந்த டெக்னீஷியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம். அந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.40 லட்சம் செலவானதாம். அந்த மொத்த செலவையும் சிவகார்த்திகேயனே ஏற்றுக்கொண்டாராம். இந்த செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





