சினிமாவில் ஒருவர் தொடர்ந்து ஜெயிக்க உழைப்பு திறமை இருந்தால் மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்பார்கள். கால நேரம் சூழ்நிலை எல்லாமே கூடி வந்தால்தான் எதுவுமே சிறப்பாக அமைந்து அடுத்தடுத்த வெற்றிகளுக்கு வழி காட்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். அப்படிதான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி தேடி வருகிறது.
இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். பராசக்தி என்ற இந்த படத்தில் ஸ்ரீலீலா அதர்வா ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் நெகட்டிவ் ரோலில் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என சமீபத்தில் மாற்றிக்கொண்ட பிரபல நடிகர் வில்லனாக நடிக்கிறார்.
அத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க ஏற்கனவே கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியானது. அருண் விஜயும் பிரபல நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தில் நாயகனாக வாய் பேசாத மாற்றுத் திறனாளி கேரக்டரில் நடித்திருந்தார்.
ரவி மோகன் மற்றும் அருண் விஜய் என பிரபல நடிகர்களை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படி தனது சமகால நடிகர்களை அதுவும் முன்னணி ஹீரோக்களை தனக்கு வில்லனாக்கி மேலும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் 2018 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை தந்தவர் மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. அதில் சிம்பு நடிப்பதாக இருந்து பிறகு சம்பள பிரச்னை ஏற்பட்டதால் அதில் இருந்து சிம்பு விலகி விட்டார்.
இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குவதாக இருந்தது. இப்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில் அந்த படத்தை மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் டைரக்ட் செய்ய கமிட் ஆகியிருக்கிறார். இதில் ஆர்யா தான் வில்லனாக நடிக்கிறார். இந்த படம், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த கதை என்றும், அதில் எஸ்கே நடிப்பதும் உறுதியாகி உள்ளது.





