துவக்கத்தில் சில லட்சங்களில் சம்பளம் வாங்கிய பல நடிகர், நடிகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கோடி ரூபாய்களில் சம்பளம் வாங்க தொடங்கி விட்டனர். அதுவும் காமெடி நடிகர்களின் சம்பளம் கூட இப்போதெல்லாம் பல கோடி ரூபாய்களை கடந்து விட்டது.அது மட்டுமின்றி முன்னணி நடிகைகளின் சம்பளமும் கோடிகளில் தான் இருக்கின்றன.
ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்கு கூட சில பிரபல நடிகைகள் பல கோடி ரூபாய்களை சம்பளமாக வாங்குகின்றனர். முன்னணி நடிகர்கள் பலரும் கேமியோ ரோலில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர். அதுவும் பான் இந்தியா படங்களாக வெளிவரும் இந்த சூழ்நிலையில் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிச் சேர்ந்த நடிகர்களும் கேமியோ ரோலில் நடித்து பல கோடி ரூபாய்களை சம்பளம் வாங்கி கல்லாகட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் துவக்கத்தில் நாயகனாக அறிமுகமான போது சாதாரண நடிகராக பார்க்கப்பட்டவர் சிவகார்த்திகேயன். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால், இனி விஜய் இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நடிகராக இருப்பார் என்று தமிழ் சினிமாவில் பேசும் அளவுக்கு இப்போது எஸ்கே இமேஜ் உயர்ந்திருக்கிறது.
இதற்கு மேலும் வலு கூட்டும் விதமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை சிவகார்த்திகேயன் தந்திருக்கிறது. கடந்த 31ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் ரிலீஸ் ஆன நிலையில், 3 நாட்களில் 104 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய வசூலை உலகளவில் அமரன் படம் குவித்தது.
இப்போது 7 நாட்களில் மொத்தம் 180 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 7 நாட்களில் மொத்த 87 கோடி ரூபாய் அளவுக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படம் வசூலை அள்ளி இருக்கிறது. அதனால் சிவகார்த்திகேயன் படத்தை திரையிட்ட வகையில் தமிழ்நாடு தியேட்டர்கள் மூலம் 50 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் எந்த படமும் மிகப்பெரிய ஷேர் தரும் வெற்றியை, வசூலை குவித்ததில்லை.
அதிகபட்சமாக அவர் நடித்த டான் படம் மட்டுமே 32 கோடி ரூபாய் ஷேர் தந்த நிலையில், இப்போது அமரன் படம் 50 கோடி ரூபாய் ஷேர் தருகிற அளவுக்கு கணிசமாக வசூலித்திருக்கிறது. அமரன் படத்துக்கு சிவகார்த்திகேயன் 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நிலையில், இனி அவரது சம்பளம் அடுத்த படத்தில் இருந்து 50 கோடி முதல் 55 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் அவரது சம்பளம் 35 கோடியாக இருந்த நிலையில், இனி வரும் படங்களில் அவரது சம்பளம் கணிசமாக 55 கோடி ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.





