தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. பல வெற்றிப் படங்களை தந்த நடிகர் சூர்யாவின் சமீபகால படங்கள் பலத்த தோல்வியடைந்து வருகின்றன. குறிப்பாக பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் பிளாப் ஆனது. அடுத்து கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாக உள்ள அவரது 2 படங்களும் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
நடிகர் சூர்யாவின் அப்பா நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜீத் என 3 தலைமுறைகளை கடந்த நடிகராக உள்ளார். இப்போது சொற்பொழிவாளராக பல மேடைகளில் பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது மகன்கள் சூர்யா கார்த்தி குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நடிகர் சிவக்குமார் கூறியதாவது, நான் என் மகன்களை சினிமாவில் கொண்டு வர நினைக்கவில்லை. ஏனென்றால் அதில் உள்ள ரிஸ்க் எனக்குத் தெரியும். 10 ஹீரோக்களின் மகன்கள் நடிக்க வந்தால் அதில் 9 பேர் தோற்று போயிருக்கின்றனர். நானே சினிமாவில் தோற்றுப் போயிருந்தால், கையில் பிரஷ் இருக்கு, பெயிண்ட் அடித்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் இருந்தது.
சூர்யாவுக்கு நடிகனாகும் எண்ணமே கிடையாது. என் அப்பா நடித்தால் நான் நடிக்கணுமா, அவர் டயலாக் பேசினால் நானும் பேசணுமா என்றுதான் முதலில் இருந்தார். இயக்குனர் வசந்த், சூர்யாவை நடிக்க என்னிடம் கேட்ட போது, அவன் ஒரு நாளைக்கே 2 வார்த்தைதான் பேசுவான். அவன் அம்மா கிட்டயே 4 வார்த்தைக்கு மேல பேச மாட்டான். அவன் நடிக்க சரிப்பட்டு வரமாட்டான் என்று சொன்னேன். என்றாலும் வசந்த் சூர்யாவை நடிக்க வைத்தார்.
சூர்யா, கார்த்தி குறித்து நான் ஒருமுறை ஜோசியம் பார்த்தேன். அந்த ஜோசியக்காரர் சூர்யா கலைத்துறையில் வருவார். அதுவும் நடிகராக வருவார் என்றார். அவன் தினமும் 4 வார்த்தையே பேச மாட்டான் என்றேன். இல்லை. சக்கரங்கள் அந்த நேரத்தில் அவரை பேச வைக்கும் என்றார். தொடர்ந்து உங்களை விட பெரிய நடிகராக வருவார்.
உங்களை விட நிறைய விருதுகள் வாங்குவார். உங்களை விட நிறைய சம்பாதிப்பார் என்று சொன்ன அவர், காதல் திருமணம்தான் செய்துக்கொள்வார் என்றார். அந்த ஜோசியக்காரர் சொன்னது எல்லாமே நடந்தது. அதனால் சூர்யா நடிக்க வருவதற்கு முன்பே காதல் திருமணம் செய்வார் என்பது எனக்கு தெரிந்து விட்டது. 150 படங்களில் நான் 150 பெண்களை காதலித்தவன். என் மகன் ஒரு பெண்ணைத்தானே காதலித்தான் என மவுனமாக இருந்துவிட்டேன், என்று நடிகர் சிவக்குமார் கூறியிருக்கிறார்.





