தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்கள் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதே போல் அஜீத்குமார், விஜய்க்கு இந்த இரண்டு படங்களுமே அவர்களது திரை பயணத்தில் முக்கிய மைல் கற்களாக அமைந்தன.
இந்த படங்களுக்கு பிறகு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கி, நடித்த எஸ்ஜே சூர்யா நடிகராகவும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களில் நடித்த அவர் திடீரென 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார்.
அதன்பிற்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மெர்சல், மான்ஸ்டர், ஸ்பைடர், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகா்தண்டா டபுள் எக்ஸ், ராயன் உள்ளிட்ட படங்கள் மூலம் தனது வில்லன் நடிப்பில் 2வது இன்னிங்ஸை சூப்பராக அடித்து விளையாடி வருகிறார்.
எஸ்ஜே சூர்யாவை பொருத்த வரை அவரது வில்லன் நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வில்லனாக அவரது நடிப்பில் காட்டும் பரிமாணங்களும், நவரசங்களும் ஹீரோவை காட்டிலும் பன்மடங்கு பின்னி பெடலெடுத்து வருகிறது. மார்க் ஆண்டனி படத்தில் ஹீரோ விஷால் என்றாலும், கிரெடிட் முழுவதும் எஸ்ஜே சூர்யாவுக்குதான் கிடைத்தது.
இப்போது தமிழில் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் எஸ்ஜே சூர்யா. தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். இதற்கிடையே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ள தி கிங் என்ற படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஷாருக்கான் படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் தி கிங் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க 45 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை தொடர்ச்சியாக கால்ஷீட் கேட்டுள்ள்னர். அத்தனை நாட்கள் ஒரு படத்துக்கு கால்ஷீட் தந்தால், கமிட் ஆன மற்ற படங்களில் நடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதால் ஷாருக்கானுடன் நடிக்க எஸ்ஜே சூர்யா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணுகிறாரே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.





