ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் திரைக்கதை என்பது மிகவும் சுமாராகத்தான் இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியை சற்று சுற்றலில்தான் விட்டிருப்பார் இயக்குனர் நெல்சன்.
அதேசமயம் படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் அற்புதமாகவும், கிளாசிக் ஆகவும் எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படத்தின் வெற்றி என்பது உச்சத்திற்கு சென்றது. கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரை சரியான இடத்தில் பயன்படுத்தி, தரமான ஒரு பான் இந்தியா திரைப்படமாக இதனை கொடுத்திருந்தார் நெல்சன்.
இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. படம் கொடுத்த அதீத லாபத்தால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி கௌரவித்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினார் நெல்சன். பிறகு முழு வீச்சாக தமிழக கேரள எல்லையோர பகுதிகளிலும் தொடர்ந்து மைசூரிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எப்படியும் டிசம்பர் மாதத்திற்குள் இதன் சூட்டிங்கை நடத்தி முடிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
முந்தைய பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு இதிலும் வருகிறார்கள். அதுபோக சிவராஜ்குமார் மற்றும் மோகன் லாலுக்கும் சரியான கதாபாத்திரத்தை நெல்சன் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புதுப்புது கதாபாத்திரங்களையும் இந்த திரைப்படத்தில் நெல்சன் சேர்த்திருக்கிறாராம்.
அதன்படி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கேமியோ ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே மலையாள நடிகர் பகத் பாஸில் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, எஸ்.ஜே.சூர்யாவும் படப்பிடிப்பில் இணைந்து இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ் ஜே சூர்யா கில்லர் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கும் சூழலில், ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





